அமைச்சர் செங்கோட்டையனுக்கு விளையாட்டுத்துறை கூடுதல் பொறுப்பு
பாலகிருஷ்ண ரெட்டி ராஜினாமா செய்துள்ள நிலையில், அமைச்சர் செங்கோட்டையனுக்கு விளையாட்டுத்துறை கூடுதல் பொறுப்பாக ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
1998ம் ஆண்டு கிருஷ்ணகிரியில் கள்ளச்சாராய விற்பனைக்கு எதிராக பாலகிருஷ்ண ரெட்டி மற்றும் பொதுமக்கள் போராட்டம் நடத்தினர். போராட்டத்தின் போது கல்வீசி தாக்கியதாக பாலகிருஷ்ண ரெட்டி உள்ளிட்ட 108 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த இந்த வழக்கில் இன்று தீர்ப்பு அளிக்கப்பட்டது. அதில் பாலகிருஷ்ணா ரெட்டி உள்ளிட்ட 16 பேர் குற்றவாளிகள் என்று தீர்ப்பளித்தும், மற்றவர்களை விடுவித்தும் உத்தரவிட்டார்.
குற்றவாளிகள் என்று அறிவிக்கப்பட்டவர்களுக்கு தலா 3 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், தலா பத்தாயிரத்து ஐநூறு ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டது. இதனையடுத்து மேல்முறையீடு செய்ய உள்ளதால், தண்டனையை நிறுத்தி வைக்குமாறு பாலகிருஷ்ண ரெட்டி தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது. இதையேற்ற நீதிபதி தண்டனையை 30 நாட்களுக்கு நிறுத்தி வைத்து அதற்குள் மேல்முறையீடு செய்ய நீதிபதி அவகாசம் அளித்தார்.
3 வருட சிறைத்தண்டனை விதிக்கப்பட்டதை அடுத்து, அமைச்சர் பதவியை பாலகிருஷ்ண ரெட்டி ராஜினாமா செய்தார். தனது ராஜினாமா கடிதத்தை ஆளுநருக்கு அனுப்பி வைத்தார். ஆளுநர் ராஜினாமா கடிதத்தை ஏற்றுக் கொண்டார். இதனையடுத்து, பாலகிருஷ்ண ரெட்டி வகித்து வந்த இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை, அமைச்சர் செங்கோட்டையனுக்கு கூடுதல் பொறுப்பாக ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே அவர் பள்ளிக் கல்வித்துறை அமைச்சராக பதவி வகித்து வருகிறார்.