“ஸ்டாலின் காமெடி நடிகராக மாறி வருகிறார்”- அமைச்சர் செல்லூர் ராஜு
திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அரசியலில் காமெடி நடிகராக மாறி வருவதாக அமைச்சர் செல்லூர் ராஜூ விமர்சனம் செய்துள்ளார்.
திருப்பரங்குன்றத்தில் தமிழக கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜூ செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது பாஜகவுடன் கூட்டணி அமைக்கலாம் என்ற அமைச்சர் ஆர்.பி.உதயகுமாரின் கருத்திற்கு பதிலளித்த அவர், “கூட்டணி குறித்து அமைச்சர்கள் யார் வேண்டுமானாலும் அரசியல் கருத்து கூறலாம். ஆனால் உயர்மட்டக் குழுதான் தேர்தல் நேரத்தில் கூட்டணி குறித்து முடிவு செய்யும். அமைச்சர்களின் கருத்து அ.தி.மு.க.வின் கருத்தாக எடுத்துக் கொள்ளப்படாது. கூட்டணியின் சாதக பாதகங்கள் குறித்து பின்னர் ஆலோசனை செய்து முடிவு செய்யப்படும்.
தேர்தல் நேரத்தில் யாருடன் கூட்டணி வைத்து மக்களை சந்தித்தால் எதிரிகளை வீழ்த்த முடியும் என்ற சாணக்கிய முடிவு எடுக்கப்படும். 40 தொகுதிகளிலும் தனித்து போட்டியிடும் வகையில்தான் தற்பொழுது தேர்தல் பணிகள் நடைபெற்று வருகிறது. ஜெயலலிதா இருந்த காலங்களில் எப்படி கூட்டணி அமைக்கப்பட்டதோ அதே போன்ற கூட்டணியை வரும் காலங்களில் முதல்வர், துணை முதல்வர் அமைப்பார்கள். மக்கள் விரும்பும் கட்சியுடன் அ.தி.மு.க கூட்டணி அமைக்கும்” என்றார்.
மேலும் 2 மாதத்தில் அ.தி.மு.க ஆட்சி கலையும் என்ற மு.க.ஸ்டாலின் கருத்திற்கு பதில் அளித்த அவர், “மு.க.ஸ்டாலின் தொடர்ந்து பல ஆண்டுகளாக ஆட்சி கலையும் என பேசுவது நகைச்சுவையாக உள்ளது. அவரது கனவு நிறைவேறாது. தற்பொழுது ஸ்டாலின் கிராமங்களில் சென்று உலறிக் கொட்டி வருகிறார். எம்.ஜி.ஆர் இருந்தபோது 14 ஆண்டுகள் வனவாசம் சென்ற கட்சி தி.மு.க என்பது தெரியாமல், தற்பொழுது கிராமசபை கூட்டத்தை நடத்தி மக்களை சந்தித்து வருகிறார். மு.கஸ்டாலின் அரசியலில் வடிவேல் போன்ற காமெடி நடிகராக மாறி வருகிறார். ஆளும் கட்சியாக இருக்கும் போது மக்களுக்கு இனிப்பாக பேசும் தி.மு.க, ஆட்சியமைத்தால் மக்களை மறந்து தங்களது குடும்பத்தை பற்றி மட்டுமே நினைப்பார்கள் என்பது மக்களின் மனநிலையில் உள்ளது” என்றார்.
இதனைதொடர்ந்து மத்திய இடைக்கால பட்ஜெட் மிகச் சிறந்த பட்ஜெட், வரவேற்கத்தக்கது என்றும் மக்கள் நலன் கொண்ட திட்டங்களை தரும் பட்ஜெட்டாக உள்ளது எனவும் அவர் கூறினார்.