விஷத்தை கக்கும் கமலின் நாக்கை அறுக்க வேண்டும் - ராஜேந்திர பாலாஜி
சிறுபான்மையின மக்களின் வாக்குகளை பெற விஷத்தை கக்கி வரும் கமலின் நாக்கை அறுக்க வேண்டும் என்று அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கூறியுள்ளார்.
அரவக்குறிச்சியில் மக்கள் நீதி மய்யம் கட்சி வேட்பாளரை ஆதரித்து பரப்புரை மேற்கொண்ட அக்கட்சியின் தலைவர் கமல்ஹாசன், ‘சுதந்திர இந்தியாவின் முதல் தீவிரவாதி ஒரு இந்து, அவன் பெயர் கோட்சே’ எனத் தெரிவித்தார். கமலின் இந்த பேச்சுக்கு ஆதரவும், எதிர்ப்பும் கிளம்பியுள்ளது.
கமலின் பேச்சுக்கு தமிழக அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து தூத்துக்குடியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “கமல்ஹாசனுக்கு நாக்கில் சனி உள்ளது. இந்துக்கள் அதிகமாக உள்ள பகுதியில் சென்று இந்து தான் முதல் பயங்கரவாதி என்று பேசியிருக்கிறார். பயங்கரவாதத்திற்கு மதம் கிடையாது. தீவிரவாதியை தீவிரவாதி என்றே கூற வேண்டும். கமலின் நாக்கை அறுக்கத்தான் போகிறார்கள்.
யாரோ ஒருவர் பயங்கரவாதம் செய்தால் ஒட்டுமொத்த சமுதாயத்தையும் குறை சொல்லக் கூடாது. அந்நிய சக்திகளுக்காக பேசி வரும் கமல் மீது தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்க வேண்டும். எந்த மதத்தையும் புண்படுத்தும்படியாக பேசுபவர்கள் கண்டிக்கப்பட வேண்டும். தேர்தல் ஆணையம் தலையிட்டு கமல் கட்சியை தடை செய்ய வேண்டும்” என்று கூறினார்.