மானிய விலையில் சர்க்கரை வழங்கினால் ரூ.1300 கோடி நிதிச்சுமை ஏற்படும்: அமைச்சர் காமராஜ் விளக்கம்

மானிய விலையில் சர்க்கரை வழங்கினால் ரூ.1300 கோடி நிதிச்சுமை ஏற்படும்: அமைச்சர் காமராஜ் விளக்கம்
மானிய விலையில் சர்க்கரை வழங்கினால் ரூ.1300 கோடி நிதிச்சுமை ஏற்படும்: அமைச்சர் காமராஜ் விளக்கம்
Published on

ரேஷன் கடைகளில் மானிய விலையில் சர்க்கரை வழங்கினால் ரூ.1300 கோடி கூடுதல் நிதிச்சுமை ஏற்படும் என்று உணவுத் துறை அமைச்சர் காமராஜ் விளக்கம் அளித்துள்ளார். 

தமிழகத்தில் ரேஷன் கடைகளில் வழங்கப்படும் சர்க்கரை விலை 13 ரூபாய் 50 காசுகளில் இருந்து 25 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. இதற்கு திமுக செயல் தலைவர் ஸ்டாலின், மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் உள்ளிட்ட பல்வேறு தலைவர்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். 

இந்த நிலையில், மானிய விலையில் தொடர்ந்து சர்க்கரை வழங்கினால் கூடுதல் நிதிச்சுமை ஏற்படும் என்பதால் விலை உயர்த்தப்பட்டுள்ளதாக அமைச்சர் காமராஜ் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், “தமிழகத்தை தவிர வேறு எந்த மாநிலத்திலும் மானிய விலையில் சர்க்கரை வழங்கப்படுவது கிடையாது. ஏழை எளிய மக்களுக்கு அதேவிலையில் சர்க்கரை கிடைக்கும். இதர ஒரு கோடியே 75 லட்சம் ரேஷன் கார்டுகளுக்கு சர்க்கரை விலையில் மாற்றம் கொண்டு வரப்பட்டுள்ளது. மானிய விலையில் சர்க்கரை வழங்கினால் தமிழகத்திற்கு 1300 கோடி கூடுதல் நிதிச் சுமை ஏற்படும். தற்போது மாற்றப்பட்ட விலையில் 836 கோடி ரூபாய் கூடுதல் சுமை ஏற்படும்” என்று கூறினார்.

மேலும் சர்க்கரை விலை உயர்வு குறித்து ஸ்டாலின் பேசுவது வேடிக்கையாக உள்ளது என்று தெரிவித்த காமராஜ், 2013-ம் ஆண்டு மக்களவையில் திருத்தப்படாத தேசிய உணவு பாதுகாப்பு திட்ட மசோதாவை ஆதரித்து திமுக நாடாளுமன்ற உறுப்பினர்கள் வாக்களித்ததாகவும், அதிமுக எம்.பி.க்கள் எதிர்த்து வாக்களித்ததாகவும் கூறினார். எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அரசு சாதாரண மக்கள் பாதிக்காத வகையில் பொதுவிநியோக திட்டத்தை செயல்படுத்தி வருகிறது என்று அமைச்சர் காமராஜ் தெரிவித்தார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com