” எனக்கென்று ஒரு கௌரவம் இருக்கிறது” - ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்

” எனக்கென்று ஒரு கௌரவம் இருக்கிறது” - ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்
” எனக்கென்று ஒரு கௌரவம் இருக்கிறது” - ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்

நான் செல்லும் இடங்களில் கருப்புக் கொடி காட்டுபவர்களை ஒரு பொருட்டாக நான் கருதுவதில்லை என ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்  தெரிவித்துள்ளார். அருப்புக்கோட்டை தனியார் கல்லூரியின் கணிதப் பேராசிரியை நிர்மலா தேவி மாணவிகளை தவறாக வழிநடத்துகிறார்  என்ற புகார் விஸ்வரூபம் எடுத்து நிலையில், ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் அண்மையில் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது, ஆளுநரிடம் செய்தியாளர்கள் பல்வேறு கேள்விகளை கேட்டனர். பின்னர் செய்தியாளர் சந்திப்பு முடியும் போது பெண் நிருபர் ஒருவர் ஆளுநரிடம் கேள்வி ஒன்றினை எழுப்பியுள்ளார். அதற்கு நீங்கள் என் பேத்தி மாதிரி என்று கூறிய ஆளுநர் பெண் நிருபரின் கன்னத்தில் லேசாக தட்டினார். இந்த விவகாரமும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

இந்நிலையில் "தி இந்து" ஆங்கில நாளிதழ்க்கு அவர் அளித்துள்ள பேட்டியில் இவ்வாறாக குறிப்பிட்டுள்ளார். மேலும், இந்தப் பேட்டியில் அவர் மனம் திறந்து பல்வேறு விஷயங்களை பகிர்ந்துள்ளார்.

நீங்கள் தனியாக ஒரு அரசாங்கம் நடத்துவதாக கூறப்படுகிறதே ? 

பதில்: என்னுடைய அனைத்து பயணங்களும் ஏன் சர்ச்சையாகப்படுகிறது என்பது புரியவில்லை. ஆளுநர் பதவி என்பது ஒரு மிகப்பெரிய பொறுப்பு. ஒரு மாநிலத்தின் தலைமை பொறுப்பும் கூட. எனவே, தமிழகத்தை முழுவதுமாக புரிந்துக்கொள்ளவே பல்வேறு பகுதிகளுக்கு சென்று அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினேன். இதன் மூலம் தமிழ்நாட்டின் கலாசாரம், நிலப்பரப்பு, தொழிற்சாலைகள், விவசாயிகள், மக்களின் வாழ்க்கை முறையை அறிய விரும்பினேன். ஆனால் ஒருபோதும் மாநில அரசின் செயல்பாடுகளில் தலையிட்டதில்லை என்றபோது என் மீது ஏன் இதுபோன்ற குற்றச்சாட்டுகள் ? 

நீங்கள் ஒவ்வொரு மாவட்டமாக பார்வையிடுவதை திமுக கடுமையாக எதிர்க்கிறதே, மு.க.ஸ்டாலின் கூட அண்மையில் சந்தித்தாரே ?

பதில்: நான் என்னுடைய நோக்கத்தையும் விளக்கத்தையும் ஸ்டாலினிடம் தெரிவித்துள்ளேன். அவர் என் ஆலோசனைக் கூட்டத்தில் கலந்துக்கொண்ட மாவட்ட ஆட்சியர்கள், காவல்துறை கண்காணிப்பாளர்கள் மற்றும் 300 அதிகாரிகளிடம் கேட்டு விவரங்களை தெரிந்துக்கொள்ளலாம். ஆனால், ஸ்டாலினுக்கு அதில் விருப்பமில்லை. அவருக்கு வேறு குறிக்கோள்கள் இருக்கிறது. அதில் எனக்கு எந்தப் பிரச்னையும் இல்லை.

அப்போது நீங்கள் அதிகாரிகளை சந்திக்கும்போது உத்தரவிடுவதில்லையா ?

பதில்: நான் அதிகாரிகளை சந்திக்கும் போது தகவல்களை கேட்டுத் தெரிந்துக்கொள்வேன். அவர்களிடம் வாழ்வும், பணியும் எப்போதும் திறந்த புத்தகமாக இருக்க வேண்டுமென ஆலோசனை வழங்குவேன். மேலும் பணிக்கு சரியான நேரத்தில் வர வேண்டும், கடவுள் மீது நம்பிக்கை வையுங்கள், முறைகேடான பணம் வாழ்கைக்கு உதவாது என்று கூறுவேன். ஆனால், ஒருபோதும் உத்தரவுகளை நான் பிறப்பித்தது இல்லை.

முதலில் Go Back Modi இப்போது Go Back Governor, இதற்கு உங்கள் பதில் ?

பதில்: இதுபோன்ற விஷயங்கள் இங்குள்ள அரசியல் கட்சிகளுக்கு பழகிவிட்டது. என்னை மோசமாக சித்தரிப்பது மூலம் அவர்களின் வாக்கு வங்கி அதிகரிக்கும் என்று நினைக்கிறார்கள். என்னால் அவர்களுக்கு நிகராக போட்டிபோட முடியாது. நான் ஒரு ஆளுநர். எனக்கென்று ஒரு கெளரவம் இருக்கிறது.

அப்போது நீங்கள் தொடர்ந்து அனைத்து மாவட்டங்களுக்கும் செல்வீர்களா ?

பதில்: நிச்சயமாக தொடர்ந்து செல்வேன். இந்த மாநிலத்தின் முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி என்னை புரிந்து வைத்துள்ளார். எங்கெல்லாம் நான் செல்கிறேனோ அங்கெல்லாம் எதிர்கட்சிகள் கருப்புக் கொடி காட்டுகிறார்கள். என்னால் அதனை ஜீரணித்துகொள்ள முடிகிறது. ஆனால் இந்தச் செயல் ஒரு ஆளுநரை அவமானப்படுத்தும் செயல், இது ஒரு தண்டனைக்குரிய குற்றம், அவர்களை கைது செய்யலாம். ஆனால், அவர்களை நான் பொருட்படுத்தவில்லை. 

துணை வேந்தர் நியமங்கள் குறித்து மீதான விமர்சனங்கள் ?

பதில்: கடந்த 6 மாதங்களில் 5 பல்கலைக்கழகங்களுக்கு துணை வேந்தர்கள் நியமிக்கப்பட்டுள்ளார்கள். அண்ணா பல்கலைக்கழக துணை வேந்தர் சூரப்பா நியமனம் தவிர மற்ற நியமனங்கள் எல்லாம் வெகுவாக ஏற்றுக்கொள்ளப்பட்டன. அண்ணா பல்கலைக்கழக துணை வேந்தர் பதவிக்கு 145 விண்ணப்பங்கள் வந்தன. அதில் 9 விண்ணப்பங்கள் "ஷார்ட் லிஸ்ட்" செய்யப்பட்டது. அதில் இருந்துதான் சூரப்பா தேர்ந்தெடுக்கப்பட்டார். துணை வேந்தர்கள் நியமனங்களை பொறுத்தவரை அனைத்தும் வெளிப்படைத் தன்மையுடனே நடந்துக்கொண்டேன்.

பேராசிரியை நிர்மலா விவகாரத்தில் ஒரு நபர் விசாரணை கமிட்டி அமைத்து ஏன் ?  அவசர அவசரமாக செய்தியாளர் சந்திப்பும் ஏன் ?

பதில்: நான் ஆளுநர் மட்டுமல்ல பல்கலைகழகங்களுக்கான வேந்தரும் கூட. எனவே, பல்கலைக்கழகத்தில் தவறு நிகழும்போது அதனை விசாரிக்கவும், விசாரணை ஆணையம் அமைக்கவும் எனக்கு முழு அதிகாரமும் இருக்கிறது. நான் எப்போதும் ஆளுநருக்கான வரம்புகளில் மட்டுமே இருந்து செயல்படுகிறேன், ஒருபோதும் வரம்பு மீறியதில்லை. 40 ஆண்டுகளாக பத்திரிக்கையாளர்களுடன்தான் என் வாழ்வு நகர்ந்துக்கொண்டு இருக்கிறது. எனவே பத்திரிக்கையாளர் சந்திப்பை நிகழ்த்தி அவர்களுக்கு உண்மை தெரிய வேண்டும் என நினைத்தேன். பத்திரிக்கையாளர்கள் சந்திப்பது நடத்துவது குற்றமா என்ன ?

நிர்மல தேவி விவகாரத்தில் நீங்கள் உத்தரவிட்டுள்ள விசாரணை ஆணையம், தமிழக அரசு உத்தரவிட்டுள்ள சிபிசிஐடி விசாரணை ? ஏன் இந்த முரண் ?

பதில்: நான் உத்தரவிட்டுள்ள விசாரணை ஆணையம் வெளிப்படைத்தன்மை கொண்டதாக இருக்கும். ஆணையத்தின் அறிக்கை அரசுக்கு சமர்பிக்கப்படும். இதில் முரணும் இல்லை, மறைக்கவும் ஏதும் இல்லை.

ஊழல் நிறைந்ததா தமிழக அரசு ?

பதில்: ஆதாரமற்ற குற்றச்சாட்டு. நான் 6 மாதமாக ஆளுநராக இருக்கிறேன் எனக்கு தெரியும்.

குடியரசு தலைவர் ஆட்சியை கொண்டு வருவீர்களா ?

பதில்: ஒரு நிலையான ஆட்சியை தருவதற்கே நான் ஆளுநராக இருக்கிறேன்.

எம்.எல்.ஏ. தகுதி நீக்க விவகாரம் குறித்த வழக்கு உயர் நீதிமன்றத்தில் இருக்கிறது, தீர்ப்பு எப்போது வேண்டுமானாலும் வரலாம் ?

பதில்: ஆமாம் வழக்கு குறித்து எனக்கு தெரியும். ஆனால் தீர்ப்பு என்னவாக இருக்கும் என்பது குறித்து நாம் யூகிக்க முடியாது. தீர்ப்பு எப்படியாக இருந்தாலும் சட்டத்தின்படி நடப்பேன், அதில் எந்த சமரசமும் செய்துக்கொள்ள மாட்டேன். ஏனென்றால், எனக்கு இழப்பதற்கு ஏதுமில்லை. 

தகவல்கள்: தி இந்து நாளிதழ்

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com