ஆய்வுக் கூட்டங்கள் அரசியல் சட்டத்திற்கு உட்பட்டதே: ஆளுநர் மாளிகை விளக்கம்

ஆய்வுக் கூட்டங்கள் அரசியல் சட்டத்திற்கு உட்பட்டதே: ஆளுநர் மாளிகை விளக்கம்
ஆய்வுக் கூட்டங்கள் அரசியல் சட்டத்திற்கு உட்பட்டதே: ஆளுநர் மாளிகை விளக்கம்

மாவட்டங்களில் ஆளுநர் நடத்தும் ஆய்வுக் கூட்டங்கள் அரசியல் சட்டத்துக்கு உட்பட்டவை என ஆளுநர் மாளிகை மீண்டும் விளக்கம் அளித்துள்ளது. தமிழக ஆளுநராக பொறுப்பேற்றது முதல் ஊடகங்களில் வெளியாகும் தகவல்களை சுட்டிக்காட்டி இந்த விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

ஆளுநர் நடத்தும் ஆய்வுக் கூட்டங்கள் தொடர்பாக மகாராஷ்டிரா முன்னாள் அரசு தலைமை வழக்கறிஞரிடம் பெற்ற கருத்தை மேற்கோள்காட்டி ஆளுநர் மாளிகை இன்று அறிக்கை வெளியிட்டுள்ளது. அதன்படி, தமிழக ஆளுநராக பொறுப்பேற்றதுமே, கடந்த ஆண்டு நவம்பரில் மகாராஷ்டிரா முன்னாள் அரசு தலைமை வழக்கறிஞரிடம் சட்ட ஆலோசனை பெற்றதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

மாவட்டங்களில் ஆய்வுக் கூட்டங்களை ஆளுநர் நடத்துவது குறித்து எழுந்த கேள்விகளுக்கு விளக்கம் கேட்ட நிலையில், மூத்த வழக்கறிஞர் ஸ்ரீஹரி அனி அளித்த கருத்தின் நகலையும் ஆளுநர் மாளிகை அறிக்கையுடன் இணைத்து வெளியிட்டுள்ளது. மாநிலத்தின் ஆளுநர் என்ற வகையில் மாவட்ட அதிகாரிகளுடன் கூட்டம் நடத்த அரசியல் சட்டப்படி ஆளுநருக்கு உரிமை உள்ளதாக மூத்த வழக்கறிஞரின் கருத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளதை ஆளுநர் மாளிகை சுட்டிக்காட்டியுள்ளது.

கடந்த ஆண்டு நவம்பர் 14ஆம் தேதி கோவையில் நடந்த ஆய்வுக் கூட்டத்தில் ஆளுநர் பங்கேற்றது குறித்து தொலைக்காட்சிகள் மற்றும் அச்சு ஊடகங்களில் வெளியான செய்திகள், விவாதங்கள் அடிப்படையில் மூத்த வழக்கறிஞரிடம் கருத்து கேட்கப்பட்டதாகவும் ஆளுநர் மாளிகை தெரிவித்துள்ளது. இந்த வெளியீடு மூலம் ஆளுநரின் நிர்வாக அதிகாரம் குறித்து அறியலாம் என்றும், பொதுமக்களுக்கு ஆளுநரின் சட்டரீதியான நிலை குறித்து தெரிவிக்க கேட்டுக் கொள்வதாகவும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com