பாஜகவின் இசைக்கு நடனமாடுகிறது தமிழக அரசு: பிரகாஷ் ராஜ்
தூத்துக்குடியில் நடைபெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவம் தொடர்பாக தமிழகம் வெட்கப்பட வேண்டும் என்று நடிகர் பிரகாஷ் ராஜ் ட்வீட் செய்துள்ளார். தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட வலியுறுத்தி நேற்று 100வது நாள் போராட்டம் நடைபெற்றது. 144 தடை உத்தரவையும் மீறி போராட்டக்காரர்கள் ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட சென்றதால், காவல் துறையினருடன் மோதல் ஏற்பட்டது. இந்த மோதலில் கண்ணீர் புகை குண்டு வீச்சு, தடியடி, துப்பாக்கிச் சூடு உள்ளிட்டவை நடத்தப்பட்டது. இந்தக் கலவரத்தில் போராட்டக்காரர்கள் 10 உயிரிழந்துள்ளனர்.
இது குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டு நடிகர் பிரகாஷ் ராஜ் " சொந்த மக்கள் போராடியபோது கொன்றதற்கு தமிழ்நாடு வெட்கப்பட வேண்டும். முதுகெலும்பு இல்லாத அரசு. போராட்டக்காரர்களின் அழுகுரல் அரசுக்கு கேட்கவில்லையா ? மாவட்ட மக்கள் சுற்றுச்சூழல் பாதிப்பு குறித்து அச்சம் கொண்டுள்ளனர். ஆனால் தமிழக அரசு ஆட்சியை பாதுகாக்க மத்திய அரசின் இசைக்கு, நடனமாடிக் கொண்டு இருக்கிறது" என காட்டமாக பதிவிட்டுள்ளார்.