திமுகவால் ஆட்சிக்கு வர முடியாது : முதல்வர்

திமுகவால் ஆட்சிக்கு வர முடியாது : முதல்வர்
திமுகவால் ஆட்சிக்கு வர முடியாது :  முதல்வர்

திமுகவைப் போன்ற ஏமாற்றுக் கட்சிகள் தமிழகத்தில் ஆட்சிக்கே வர முடியாது என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மீதான நெடுஞ்சாலை டெண்டர் முறைகேடு புகாரை சிபிஐ விசாரிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும் இவ்வழக்கில் தொடர்பான ஆவணங்களை சிபிஐ-யிடம் ஒப்படைக்க வேண்டும் என்றும் விசாரணையை 3 மாதத்தில் சிபிஐ முடிக்க வேண்டும் என்றும் நீதிபதி உத்தரவிட்டார். இதனையடுத்து மு.க.ஸ்டாலின்,  “பல வழக்குகளை சந்தித்த தங்களை, முதலமைச்சர் மிரட்டிப் பார்ப்பதாகவும், அதிமுக சர்க்கஸ் கூடாரமாக இருப்பதாகவும், ரிங் மாஸ்டராக பிரதமர் ஆட்டுவிப்பதாகவும் ஸ்டாலின் விமர்சித்தார். மேலும் வழக்குத் தொடுப்பேன் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பூச்சாண்டி காட்டுகிறார் என்று கூறியிருந்தார்.

இந்நிலையில் சேலம் அதிமுகவின் 47ஆவது ஆண்டு தொடக்க விழாவில் பங்கேற்ற முதல்வர் எடப்பாடி பழனிசாமி, அதிமுக வளர்ச்சியை பொறுத்துக்கொள்ள முடியாமல் திமுக தலைவர் ஸ்டாலின் தேவையற்ற குற்றச்சாட்டுகளை கூறி வருவதாக தெரிவித்தார். மேலும் ஊழலுக்காகவே தொடங்கப்பட்ட கட்சி திமுக தான் எனவும் விமர்சித்தார். அதிமுகவை யாராலும் அசைக்க முடியாது எனவும் முதலமைச்சர் திட்டவட்டமாகக் கூறினார். 


இதனைதொடர்ந்து பேசிய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி “திமுகவினர் நாள்தோறும் பொய் பரப்புரைகளை மேற்கொண்டு வருகின்றனர். உண்மைகளைத் தெரிந்துகொள்வதற்காகவே மாணவர்களுக்கு மடிக்கணினி வழங்கப்படுகிறது. மடிக்கணினியில் இணையத்தை பயன்படுத்தி நல்லது, கெட்டதை மாணவர்கள் அறிந்துகொள்வார்கள்.திமுகவைப் போன்ற ஏமாற்றுக் கட்சிகள் எந்தக் காலத்திலும் ஆட்சிக்கு வர முடியாது” என்றார். முன்னதாக சேலம் பூலாவரியில் 80 அடி உயர கொடிக்கம்பத்தில் அதிமுக கொடியை ஏற்றி, அதிமுக சார்பில் பல்வேறு தரப்பினருக்கு நலத்திட்ட உதவிகளை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வழங்கினார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com