நாளை தீர்ப்பு - சட்டவல்லுநர்களுடன் முதல்வர் பழனிசாமி ஆலோசனை
18 எம்.எல்.ஏக்களின் வழக்கில் நாளை தீர்ப்பு வெளியாகவுள்ள நிலையில், சட்டவல்லுநர்களுடன் முதலமைச்சர் பழனிசாமி ஆலோசனை நடத்தியுள்ளார்.
தினகரன் ஆதரவு எம்.எல்.ஏக்கள் 18 பேரை தகுதி நீக்கத்தை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் நாளை தீர்ப்பு வழங்குகிறது. தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி, நீதிபதி எம்.சுந்தர் அமர்வு நாளை பிற்பகல் 1 மணிக்கு இந்த தீர்ப்பை வழங்கிறார்கள். 18 எம்.எல்.ஏக்களின் தகுதி நீக்கம் செல்லாது என்று தீர்ப்பு அளிக்கப்பட்டால் சபாநாயகரின் முடிவு தள்ளுபடி ஆகும். ஒருவேளை இரண்டு நீதிபதிகளும் மாறுபட்ட தீர்ப்பை வழங்கினால் சிக்கல் ஏற்பட்டு உச்சநீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்ய நேரிடும். சபாநாயகரின் முடிவில் தலையிட முடியாது என்று கூறிவிட்டாலும், உச்சநீதிமன்றத்திற்கு தான் செல்ல வேண்டியிருக்கும்.
18 எம்.எல்.ஏ.க்கள் தீர்ப்பு நாளை வெளிவரும் நிலையில், இதுதொடர்பாக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தனக்கு நெருக்கமான சட்ட வல்லுநர்களுடன் ஆலோசனை நடத்தியிருக்கிறார். அப்போது, தீர்ப்பு வழங்கும் இரு நீதிபதிகளும் மாறுபட்ட கருத்துகள் கொண்ட தீர்ப்பினை வழங்க வாய்ப்புள்ளது என்றும், உச்ச நீதிமன்றம் சென்றபின்பே இதில் இறுதித் தீர்ப்பு கிடைக்கும் என்றும் அவரிடம் சட்ட வல்லுநர்கள் கூறியதாக கூறப்படுகிறது.