முதலமைச்சர் பழனிசாமி தலைமையில் தமிழக அமைச்சரவைக் கூட்டம் இன்று நடைபெறவுள்ளது.
தலைமைச் செயலகத்தில் நடைபெறவுள்ள இந்தக் கூட்டத்தில், அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கான 7-வது ஊதியக் குழுவின் பரிந்துரைகள் குறித்து விவாதிக்கப்பட உள்ளதாகத் தெரிகிறது. 7-வது ஊதியக் குழுவின் இறுதி அறிக்கை அரசிடம் கடந்த வாரத்தில் அளிக்கப்பட்ட நிலையில், அதை அமல்படுத்துவது தொடர்பாக அமைச்சரவைக் கூட்டத்தில் முடிவெடுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும், டெங்கு காய்ச்சலைக் கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகள், எதிர்வரும் பருவமழையை சமாளிக்கத் தேவையான நடவடிக்கைகள் குறித்தும் அமைச்சரவைக் கூட்டத்தில் ஆலோசிக்கப்படும் எனத் தெரிகிறது. தமிழக அமைச்சர்கள் அனைவரும் இக்கூட்டத்தில் பங்கேற்பார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.