சர்ச்சை வீடியோ... ஆட்சிக்கு வந்த கூடுதல் தலைவலி...

சர்ச்சை வீடியோ... ஆட்சிக்கு வந்த கூடுதல் தலைவலி...

சர்ச்சை வீடியோ... ஆட்சிக்கு வந்த கூடுதல் தலைவலி...
Published on

நாளை சட்டப் பேரவை கூடவுள்ள நிலையில் சரவணன் எம்எல்ஏவின் சர்ச்சை வீடியோ எடப்பாடி பழனிசாமி அரசுக்கு கூடுதல் தலைவலியாக வந்து சேர்ந்துள்ளது.

நாளை சட்டப்பேரவைக் கூட்டத்தொடர் நடைபெற இருக்கிறது. அப்போது எதிர்க்கட்சி எம்எல்ஏ-க்கள் 98 (திமுக(89)+காங்கிரஸ்(9)) பேரும் அவை நிறைந்து காணப்படுவார்கள். நேற்று வெளியான வீடியோ குறித்து அவர்கள் பேரவையில் புயலைக் கிளப்புவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

டிடிவி தினகரன் தரப்புக்கு ஆதரவாக இருக்கும் எம்எல்ஏ-க்கள் சட்டசபையில் எப்படி செயல்பட உள்ளனர் என்பது தெளிவாக தெரியவில்லை. 
வீடியோ விவகாரம் இல்லாவிட்டாலும் வேறு காரணத்திற்காக ஒருவேளை அவர்களும் அரசுக்கு எதிராக சட்டமன்றத்தில் செயல்பட்டால் பழனிசாமிக்கு அது கூடுதல் தலைவலியை ஏற்படுத்தும். அப்படியென்றால் ஆட்சி கவிழும் நிலை கூட ஏற்படலாம். ஆனால் ஆட்சியைக் கவிழ்க்க மாட்டோம் என்று அவ்வப்போது அவர்கள் கூறி வருவது பழனிசாமிக்கு ஒரு ஆறுதலாக அமையும். ஆனால் சர்ச்சை வீடியோ குறித்து எதிர்க்கட்சிகள் எழுப்பும் கேள்விகளுக்கு பதிலளித்து அவையை கொண்டு செல்வது முதலமைச்சர் பழனிசாமிக்கு மிகப் பெரிய சவாலாகத்தான் இருக்கும். ஓபிஎஸ் அணி இந்த வீடியோ பிரச்னையைக் கிளப்பாது என்றே தெரிகிறது. ஏனெனில் இந்தச் சிக்கலில் மாட்டிய சரவணன் எம்எல்ஏ சசிகலா அணியில் இருந்து ஓபிஎஸ் அணிக்குச் சென்றவர். 

ஏற்கனவே தினகரன் ஆதரவு எம்எல்ஏக்களின் பிரச்னைக்கு இடையே பழனிசாமி அரசுக்கு இது ஒரு கூடுதல் தலைவலி. இரட்டை இலை விவகாரத்தில் கைதாகி ஜாமீனில் வெளிவந்த பின், முதலமைச்சர் பழனிசாமிக்கும், தினகரனுக்கும் இடையில் இருந்த கசப்புணர்வு வெளியே தெரிந்தது. பழனிசாமிக்கு ஆதரவு அளித்து வந்த எம்எல்ஏ-க்கள் அனைவரும் ஒவ்வொருவராக தினகரனை அவரின் இல்லத்தில் சந்தித்து ஆதரவு தெரிவித்து வருகின்றனர். இதுவரை 30-க்கும் அதிகமான எம்எல்ஏ-க்கள் அவருக்கு தனது ஆதரவினை தெரிவித்துள்ளனர். 

இந்த நிலையில் கூவத்தூர் விடுதியில் எம்எல்ஏ-க்களிடம் விலை பேசுகிறார்கள். நான் விலைபோகாமல் பன்னீர்செல்வம் அணியில் சேர்ந்துவிட்டேன் என கூவத்தூர் விடுதியில் இருந்து வெளிவந்த எம்எல்ஏ சரவணன், தற்போது பணம் பெற்றதாக கூறிய வீடியோ வைரலாகி இருக்கிறது. சமூக வலைத்தளங்களில் எம்எல்ஏ-க்களுக்கு எதிராக பலரும் தங்களது கருத்துகளை பதிவிட தொடங்கினர். MLAForSale, DissolveTNGovt போன்ற ஹேஷ்டேக்குகளும் சமூக வலைத்தளங்களில் ட்ரெண்ட்டாகின.

எம்.எல்.ஏ.க்களுக்கு பணம் மற்றும் தங்கம் கொடுக்கப்பட்டதாக வெளியான வீடியோ காட்சி குறித்து சி.பி.ஐ. விசாரணை நடத்தக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் தி.மு.க.வும் இன்று முறையிட்டுள்ளது. மேலும், நம்பிக்கை வாக்கெடுப்பு தொடர்பான அனைத்து வழக்குகளையும் விரைந்து விசாரிக்க வேண்டும் எனவும் கோரிக்கை வைத்திருக்கிறது. 

இந்த நிலையில் தமிழக சட்டப்பேரவைக் கூட்டம் நாளை தொடங்கி ஜூலை 19-ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. மொத்தமாக 24 நாட்கள் நடைபெறும் இந்த பேரவைக் கூட்டத்தொடரில் மானியக் கோரிக்கைகள் மீதான விவாதம் நடைபெற உள்ளது. மேலும் ஜிஎஸ்டி உள்ளிட்ட சில மசோதாக்கள் தாக்கல் செய்யப்படலாம் எனவும் தெரிகிறது. 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com