திருப்பூர் - காங்கேயம் தொகுதியில் தேர்தல் களம் காணும் ஆயிரம் விவசாயிகள்!
திருப்பூர் மாவட்டம் காங்கேயம் சட்டமன்றத் தொகுதியில் விவசாயிகள் ஆயிரம் பேர் தேர்தலில் போட்டியிடத் திட்டமிட்டுள்ளனர்.
திருப்பூர் கோவை மாவட்டங்களில் பிஏபி பாசனத்தில் 3 லட்சத்து 77 ஆயிரம் ஏக்கர் பாசன நிலங்கள் உள்ளன. இதில் நான்கு மண்டலங்களாக பாசனத்துக்கு திறக்கப்படும் தண்ணீரில் காங்கேயம் கிளை வாய்காலை ஒட்டிய 48 ஆயிரம் ஏக்கருக்கு, குறைந்த அளவு நீரே திறக்கப்படுவதாக கூறி 10 ஆண்டுகளுக்கும் மேலாக இப்பகுதி விவசாயிகள் பல்வேறு கட்ட போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.
இதனால் இந்த தேர்தலில் வெள்ளகோவில் பிஏபி நீர் பாதுகாப்பு குழு, காங்கயம் சட்டபேரவைத் தொகுதியில் ஆயிரம் விவசாயிகளை களமிறக்குகிறது.
ஆண்டுக்கு 135 நாட்கள் தண்ணீர் விடவேண்டிய நிலையில், முறையற்ற நீர் விநியோகத்தால் சில கடைமடை பகுதிகளுக்கு சொட்டு நீர் கூட கிடைப்பதில்லை என்பது இவர்களின் ஆதங்கம். இந்த தேர்தல் களத்தால் பிரச்னை கவனம் பெற்று தீர்வு எட்டப்பட வேண்டும் என்பது விவசாயிகளின் எதிர்பார்ப்பாக உள்ளது.