துளிர்க்கும் நம்பிக்கை: 10 மாற்றுத்திறனாளிகள் குடும்பத்திற்கு உதவிய உள்ளங்கள்
தமிழகத்தின் பல்வேறு இடங்களில் வாழ்வாதாரம் இன்றி தவித்த குடும்பத்தினருக்கு 'புதிய தலைமுறை'யின் 'துளிர்க்கும் நம்பிக்கை' நிகழ்ச்சியின் மூலம் உதவிகிடைத்துள்ளது.
ஈரோடு மாயபுரம் பகுதியில் கணவரை இழந்து 2 குழந்தைகளுடன் தவித்து வந்த பெண்ணுக்கு, தாய்மண் நற்பணி இயக்கத்தினர் அரிசி மற்றும் ஒரு மாதத்திற்கு தேவையான மளிகைப் பொருட்கள் வழங்கி உதவினர்.
மதுரையில் ஊதுபத்தி விற்பனை செய்துவந்த 10 பார்வைத் திறனற்ற மாற்றுத்திறனாளிகள் குடும்பத்திற்கு 'துளிர்க்கும் நம்பிக்கை' நிகழ்ச்சி மூலம் உதவி கிடைத்துள்ளது. ஆம்புலன்ஸ் சேவை அளித்து வரும் ஹரிகிருஷ்ணன், அவரது மகள் இணைந்து 10 நாட்களுக்கு தேவையான மளிகை மற்றும் காய்கறிகளை வழங்கினர்.
தஞ்சாவூர் மாவட்டம் திருவையாறு அருகே ஊரடங்கால் வேலையின்றி தவித்து வந்த குடும்பத்திற்கு அப்பகுதி இளைஞர்கள் இணைந்து உதவிக்கரம் நீட்டினர்.
கோவை மதுக்கரை பகுதியில் மாற்றுத்திறனாளி உள்பட 10 குடும்பங்களுக்கு பெயர் குறிப்பிடாத ஒருவர் அரிசி மற்றும் மளிகைப் பொருட்கள் வழங்கி உதவியுள்ளார். அதனை துளிர்க்கும் நம்பிக்கை குழுவினர் அக்குடும்பத்திற்கு நேரில் சென்று வழங்கினர்.
- புதிய தலைமுறையின் 'துளிர்க்கும் நம்பிக்கை' உதவி மையத்துக்கு தினமும் நூற்றுக்கணக்கான அழைப்புகள் வந்துகொண்டிருக்கின்றன. இந்த எளியவர்களை கரை சேர்க்க உதவும் வகையில் எங்களுடன் நீங்கள் இணைய விரும்பினால் 9150734555, 9150737555 என்ற எண்களைத் தொடர்புகொள்ளுங்கள்.
கொரோனா பேரிடரில் உதவி தேவைப்படுவோருக்கு நீங்கள் அளிக்கும் உதவிகளை சரியாக சென்று சேர்வதற்கு உறுதியான அத்தனை பணிகளையும் களத்தில் இருந்து நம் குழுவினர் செய்து வருகிறார்கள்.