துணி உலர்த்தும் கொடியில் மின்சாரம் பாய்ந்து ஒரே குடும்பத்தை சேர்ந்த மூவர் பலி - தருமபுரியில் சோகம்

மின் கம்பத்தில் துணி காய வைக்க கட்டப்பட்டிருந்த கம்பியில் மின்சாரம் பாய்ந்து இருப்பதை அறியாமல், அருந்து கிடந்த கம்பியை தொட்ட தாய், மகன், அத்தை என மூன்று பேர் மின்சாரம் தாக்கி பரிதாபமாக உயிரிழப்பு.
மின்சாரம் தாக்கி இறந்தவர்கள்
மின்சாரம் தாக்கி இறந்தவர்கள்PT

காரிமங்கலம் அருகே மின் கம்பத்தில் துணி காய வைக்க கட்டப்பட்டிருந்த கம்பியில் மின்சாரம் பாய்ந்து இருப்பதை அறியாமல், அருந்து கிடந்த கம்பியை தொட்ட தாய், மகன், அத்தை என மூன்று பேர் மின்சாரம் தாக்கி பரிதாபமாக உயிரிழந்த சோக சம்பவம் நிகழ்ந்துள்ளது.

தருமபுரி மாவட்டம் காரிமங்கலம் சுற்றுவட்டார பகுதியில் நேற்று மாலை சூறைக்காற்றுடன் கனமழை பெய்தது. இந்நிலையில் காரிமங்கலம் அருகே உள்ள தண்டலம் ஊராட்சி உடைந்தக்கரை கிராமத்தில், மாதம்மாள் என்பவர் வீட்டருகே மின்கம்பத்திற்கும், நெல்லிக்காய் மரத்திற்கும் துணி காய வைப்பதற்காக கம்பி கட்டப்பட்டு இருந்துள்ளது.

இந்நிலையில், நேற்று வீசிய பலத்த சூறைக் காற்றால் தெருவிளக்கு போடுவதற்கான மின்சார கம்பத்தில் இருந்த, மின் இணைப்பு துணிக்காய வைப்பதற்கு கட்டப்பட்டிருந்த கம்பியின் பட்டு மின்சாரம் பாய்ந்துள்ளது. இந்த நிலையில் துணி காயவைப்பதற்கு கட்டப்பட்டிருந்த கம்பி, நெல்லிக்காய் மரத்திலிருந்து அறுந்து கீழே விழுந்து கிடந்துள்ளது.

மின்சாரம் தாக்கி உயிரிழந்தவர்கள்
மின்சாரம் தாக்கி உயிரிழந்தவர்கள்PT

தொடர்ந்து இன்று காலை வீட்டருகே கீழே கிடந்த துணி காய வைக்கும் கம்பியை, மாதம்மாள் கையில் எடுத்துள்ளார். அப்பொழுது மின் கம்பத்திலிருந்து துணி காய வைக்கும் கம்பியில் மின்சாரம் பாய்ந்து இருந்தது தெரியாமல், மாதம்மாள் கையில் எடுத்த போது மின்சாரம் தாக்கியது.

இதனை அறிந்த மகன் பெருமாள் தாயை காப்பாற்றுவதற்காக முயற்சி செய்துள்ளார். அப்பொழுது பெருமாளையும் மின்சாரம் தாக்கியது. மேலும் இவர்களை காப்பாற்றுவதற்காக அருகில் இருந்த பெருமாளின் அத்தை சரோஜா முயன்றுள்ளார். இதில் சரோஜாவையும் மின்சாரம் தாக்கியது. அப்போழுது கம்பியில் பாய்ந்து இருந்த மின்சாரம் மூவரும் மீது பாய்ந்ததில் மூவரும் சம்பவ இடத்திலேயே உயிர் இழந்தனர்.

இதனை அறிந்த அக்கம் பக்கத்தினர் காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்த காரிமங்கலம் காவல் துறையினர் மூவரின் உடலை மீட்டு தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

இந்த சம்பவம் குறித்து காரிமங்கலம் காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் பலத்த சூறைக் காற்று வீசியதில் துணி காய வைக்க கட்டப்பட்டு இருந்த கம்பியில் மின்சாரம் பாய்ந்து இருந்தது தெரியாமல், தொட்ட மூன்று பேர் உயிரிழந்த சம்பவம், கிராம மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. அதேபோல் பெரும்பாலான மின் கம்பங்களில் உள்ள மின்கம்பிகள் போதிய பராமரிப்பின்றி, இதுப்போன்று விபத்தை ஏற்படுத்தும் வகையில் இருப்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com