திமுக, அதிமுக என யார் பணம் கொடுத்தாலும் தவறுதான் - வானதி சீனிவாசன்
திமுக, அதிமுக என யார் பணம் கொடுத்தாலும் தவறு தான்; கரூரை சேர்ந்தவர்களை கோவையை விட்டு வெளியேற்ற வேண்டும் என பாஜக தேசிய மகளிரணி தலைவி வானதி சீனிவாசன் தெரிவித்தார்.
பாஜக வேட்பாளர்களை ஆதரித்து கவுண்டம்பாளையம் பகுதியில் பரப்புரை மேற்கொண்ட பாஜக மகளிரணி தலைவி வானதி சீனிவாசன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர்,
"நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலை முன்னிட்டு, கரூரை சேர்ந்த திமுகவினர் பணம் கொடுப்பதை தேர்தல் ஆணையத்துக்கு தெரிவிக்கிறோம். ஆனால் தாமதமாக வருகிறார்கள். கையும் களவுமாக பிடித்துக் கொடுத்தாலும் விசாரிக்கிறோம் என சொல்லி கண்டுகொள்வதில்லை.
கோவை மாவட்டத்தை பொறுத்தளவில் ஒரு இடத்திலும் வெற்றி பெற முடியாத திமுக இத்தேர்தலை மானப்பிரச்னையாக கருதி பணம் பட்டுவாடா செய்கின்றனர். எனவே காவல்துறையினர் கரூரை சேர்ந்தவர்களை வெளியேற்ற வேண்டும்.
சிறுவாணி முழு கொள்ளளவு இருக்க வேண்டும். கேரள அரசோடு பேசி முழு கொள்ளளவை எட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும். சிறுவாணி அணை தொடர்பாக கண்டுகொள்ளாத திமுக அரசு கோவை மக்களுக்கு பொய் வாக்குறுதிகளை கொடுக்கிறார்கள்.
கோவை மாநகராட்சி விலங்கியல் பூங்காவை நகரத்துக்குள்ளேயே தக்க வைக்க மாநில அரசு நடவடிக்கை எடுக்கவில்லை. திமுகவின் கவனம் எல்லாம் ஒன்று மிரட்டல். ஒன்று பணம். யார் பணம் கொடுத்தாலும் தவறுதான்.
தெற்கு தொகுதியில் பரப்புரை மேற்கொள்ளவில்லை என்ற கேள்விக்கு தேசிய பொறுப்பு எனும் போது எல்லா பக்கமும் செல்ல கட்சி வலியுறுத்துகிறது. அந்த உத்தரவைதான் நான் பின்பற்றுகிறேன். நாளை முழுவதும் எனது தெற்கு தொகுதியில் பரப்புரை மேற்கொள்கிறேன் என தெரிவித்தார்