தூத்துக்குடி தொகுதி: "இந்த தேர்தலை புறக்கணிப்போம்!" - உப்பளத் தொழிலாளர்கள்
'முத்து நகரம்' என அழைக்கப்படும் தூத்துக்குடி மக்களின் எதிர்பார்ப்பு என்ன? மக்களின் வாய்ஸ் என்ன?
'முத்து நகரம்' என அழைக்கப்படும் தூத்துக்குடி, நாட்டின் முக்கிய துறைமுக நகரங்களில் ஒன்றாகவும், தொழில் நகரமாகவும் விளங்கி வருகிறது. சாலை, ரயில், விமானம், கப்பல் என நான்கு வகை போக்குவரத்து வசதிகளைப் பெற்ற தொகுதி. வீரபாண்டிய கட்டபொம்மன், மகாகவி பாரதி, வ.உ.சிதம்பரனார் போன்ற ஆளுமைகள் பிறந்த பூமி.
தூத்துக்குடி தொகுதி மக்களின் பிரதான தொழில்கள் மீன்பிடி மற்றும் உப்புத் தொழில் ஆகும். தீப்பெட்டி,கடலை மிட்டாய் தொழிலுக்கு பெயர் பெற்ற கோவில்பட்டியும் இந்த தொகுதிக்குட்பட்ட பகுதி. தூத்துக்குடியில் நாட்டின் பெரிய துறைமுகங்களில் ஒன்றான வஉசி துறைமுகம் அமைந்திருப்பதால் அதைச் சார்ந்து ஏராளமான தொழிற்சாலைகள் உள்ளன. அனல்மின் நிலையங்களும், ரசாயனத் தொழிற்சாலைகளும் அதிகம். ஏற்றுமதி, இறக்குமதி நிறுவனங்களும் உள்ளன.
தூத்துக்குடி தொகுதியில் நாடார் சமுதாயத்தினர் பெரும்பான்மையாக வசித்து வருகிறார்கள். இதுவரை 10 சட்டமன்றத் தேர்தல்களை சந்தித்துள்ள தூத்துக்குடி தொகுதியில் திமுக, அதிமுக கட்சிகளே இங்கு மாறிமாறி வெற்றி பெற்றுள்ளன. அதிமுக 6 முறையும், திமுக 4 முறையும் இத்தொகுதியை கைப்பற்றியுள்ளன. தற்போது திமுக வசமிருக்கும் இந்த தொகுதியில் கீதா ஜீவன் எம்.எல்.ஏ.வாக இருந்து வருகிறார்.
வரவிருக்கும் தேர்தலில் தூத்துக்குடி வாக்காளர்கள் எதிர்பார்ப்பது என்ன? அவர்களிடமே கேட்டோம்..
''கடந்த சட்டமன்ற தேர்தலின் போது அதிமுக அறிவித்த தேர்தல் அறிக்கையில், உப்பள தொழிலாளர்களுக்கு மழைக்கால நிவாரணமாக ரூ.5 ஆயிரம் வழங்கப்படும் என கூறப்பட்டிருந்தது. ஆனால் இதுவரை நிவாரண நிதியுதவி வழங்கவில்லை. எனவே, உப்பளத் தொழிலாளர்களுக்கு மழைக்கால நிவாரணம் வழங்கவில்லை இந்த தேர்தலை புறக்கணிப்போம்.''
"கடலின் முகத்துவாரத்துக்கும் படகுகள் நிறுத்தப்பட்டிருக்கும் பகுதிக்கும் இடையே மணல் திட்டுகள் ஏற்படுவதால், படகை கடலுக்குள் கொண்டு செல்ல தினமும் கஷ்டப்படுகிறோம். படகைக் கயிறு கட்டி டிராக்டர் மூலம் கடலுக்குள் செலுத்தி மீன்பிடிக்கச் சென்றுவருகிறோம். அவ்வாறு படகுகளை கடலுக்குள் செலுத்தும்போது தரையில் உராய்வு ஏற்பட்டு, படகுகள் கடுமையாகச் சேதாரம் ஆகின்றன. எனவே இங்கு தூண்டில் பாலம் அமைக்க வேண்டும்''.
''தூத்துக்குடியில் சரியான மழைநீர் வடிகால் வசதி இல்லை. ஒருநாள் மழைக்கே சாலைகள், தெருக்களில் மழைநீர் குட்டை போல் தேங்கி நிற்கிறது. இதனால் மழைக் காலத்தில் தூத்துக்குடி மாநகரில் மழைநீர் தேங்கி சுகாதார சீர்கேடு ஏற்படுவது வாடிக்கையாகிவிட்டது. எனவே வடிகால் பிரச்னை உடனடியாக சரி செய்யப்பட வேண்டும்.''