’இது என் பணம் இல்லை சார்’...நேர்மையுடன் போலீசில் ஒப்படைத்த பட்டதாரி ஆசிரியர்

’இது என் பணம் இல்லை சார்’...நேர்மையுடன் போலீசில் ஒப்படைத்த பட்டதாரி ஆசிரியர்
’இது என் பணம் இல்லை சார்’...நேர்மையுடன் போலீசில் ஒப்படைத்த பட்டதாரி ஆசிரியர்

அரியலூர் ஏடிஎம்மில் தனக்கு சொந்தமில்லாமல் வந்த 9 ஆயிரம் ரூபாயை போலீசாரிடம் ஒப்படைத்த பட்டதாரி ஆசிரியருக்கு சமூக ஆர்வலர்கள் போலீசார் பாராட்டு தெரிவித்துள்ளனர்.

அரியலூர் மாவட்டம் ஆண்டிமடம் அருகே உள்ள அழகாபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் இராமன். பட்டதாரி ஆசிரியரான இவர், திராவிடநல்லூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வருகிறார்.

இவர் நேற்று காலை 10 மணி அளவில் ஆண்டிமடத்தில் உள்ள தேசியமயமாக்கப்பட்ட வங்கி ஏடிஎம் மையம் ஒன்றில் தனது சொந்த செலவுக்காக பணம் எடுக்க ஏடிஎம் கார்டை சொருகி 8 ஆயிரம் தொகையை டைப் செய்துள்ளார். அப்போது ஏடிஎம் மிஷினிலிருந்து கசங்கிய நிலையில் முதலில் ஒரு ரசீது வந்துள்ளது. அதனை தொடர்ந்து பணம் வந்துள்ளது. பணத்தை எண்ணிப்பார்த்த போது 8 ஆயிரத்துக்கு பதிலாக ரூபாய் 9 ஆயிரம் இருந்துள்ளது.

இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் மீண்டும் ஏடிஎம்.மிஷினில் தனது கார்டை பயன்படுத்தி ஆயிரம் ரூபாய் பணத்தை எடுத்துள்ளார். அப்போது ரூபாய் ஆயிரம் மட்டுமே வந்துள்ளது. இதனால் சந்தேகமடைந்தவர் அவரது கணக்கில் இருந்த இருப்பு தொகையை சரி பார்த்த போது பணம் ஏதும் குறையாமல் ஆயிரம் ரூபாய் மட்டுமே குறைந்து இருந்தது தெரியவந்தது.


இதனால் மேலும் சந்தேகமடைந்தவர் தன்னுடன் பணியாற்றும் ஆசிரியர் வேலுமணி என்பவரிடம் தெரிவித்து மீண்டும் கணக்கில் இருந்த இருப்புத் தொகையை சரி பார்த்துள்ளனர். அப்போது இருப்புத் தொகையில் ரூபாய் 1000 எடுத்தது போக மீதித் தொகை அவரது கணக்கில் அப்படியே இருந்துள்ளது.


இந்த நிலையில் தனக்கு சொந்தமில்லாத, வேறு ஒருவருக்குச் சொந்தமான பணத்திற்கு ஆசைப்படாமல் ஆசிரியர் இராமன் ஆண்டிமடம் போலீஸ் நிலையத்திற்குச் சென்று இன்ஸ்பெக்டர் முஹம்மது இத்ரீஸிடம் ரூபாய் 9 ஆயிரத்தை ஒப்படைத்தார். அதனை பெற்றுக் கொண்ட போலீஸ் இன்ஸ்பெக்டர், ஆசிரியரின் இத்தகைய செயலையும், அடுத்தவர் பணத்திற்கு ஆசைபடாத அவரின் நேர்மையையும் பாராட்டினார். மேலும் சக போலீசார்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள், பொதுமக்கள் என பலரும் அவரை வெகுவாக பாராட்டினர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com