‘டியர் காங்கிரஸ்காரர்களே, சிறப்பு’ - கிண்டலடித்த பாஜக !

‘டியர் காங்கிரஸ்காரர்களே, சிறப்பு’ - கிண்டலடித்த பாஜக !
‘டியர் காங்கிரஸ்காரர்களே, சிறப்பு’ - கிண்டலடித்த பாஜக !

தங்கள் கட்சி எம்.எல்.ஏவிடம் ஜனார்த்தன ரெட்டி குதிரை பேரத்தில் ஈடுபட்டதாக காங்கிரஸ் கட்சி வெளியிட்ட ஆடியோ போலியானது என பாஜக விமர்சித்துள்ளது. 

காங்கிரஸ் வெளியிட்ட அந்த வீடியோவில் “என்ன வேண்டும் என்று சொல்லுங்கள். உங்களை பாரதிய ஜனதா தேசியத்தலைவர் அமித்ஷாவிடம் அறிமுகப்படுத்துகிறேன் அவரிடமே நேரடியாக பேசுங்கள். என்ன பதவி வேண்டும் என்று சொல்லுங்கள். எவ்வளவு பணம் தேவை என்று நினைக்கிறீர்களோ அந்த அளவு பணத்தை கேளுங்கள்” என்று ஜனார்த்தன் ரெட்டி பேசுவது போல் உள்ளது. 

ஆடியோ குறித்து மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் கூறுகையில், “அந்த ஆடியோ காங்கிரஸ் கட்சியால் உருவாக்கப்பட்டது. இது மோசமான வழி. இது போலியான ஆடியோ” என்றார். 

கர்நாடக பாஜக தனது ட்விட்டர் பக்கத்தில், “டியர் காங்கிரஸ்காரர்களே, ஜனார்த்தன ரெட்டிக்கு யார் மெமிக்ரி செய்தது? அவர் தன்னுடைய மெமிக்ரி பணியை சிறப்பாக செய்துள்ளார். அதேபோல், சித்தராமையாவுக்கும், டிகே.சிவக்குமாருக்கும் அவர் மெமிக்ரி செய்வாரா என்பதை தெரிந்து கொள்ள விரும்புகிறோம். எங்களாலும் இதேபோல் ஆடியோ டேப் வெளியிட முடியும்! நன்றி” என்று கிண்டலாக பதிவிட்டுள்ளது.

இதனிடையே, நிச்சயம் நூறு சதவீதம் நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றி பெறுவோம் என்று முதலமைச்சர் எடியூரப்பா கூறியுள்ளார். காங்கிரஸ், மஜதவில் இருந்து எம்.எல்.ஏக்கள் ஆதரவு தெரிவித்துள்ளார்களா என்ற செய்தியாளர்களின் கேள்விக்கு பதிலளித்த அவர், “ஆமாம், நிச்சயமாக அவர்கள் எங்களுடன் இருக்கிறார்கள். அப்படி காங்கிரஸ், மஜத எம்.எல்.ஏக்கள் எங்களுக்கு ஆதரவு அளிக்காவிட்டால் எப்படி எங்களால் பெரும்பான்மையை நிரூபிக்க முடியும்?. நூறு சதவீதம் நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றி பெறுவோம்” என்றார். 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com