ஈபிஎஸ்-ஓபிஎஸ் அணிக்கு மோடி இரட்டை இலையை வழங்கியுள்ளார்: திருநாவுக்கரசர்
மத்தியில் ஆட்சி செய்யும் மோடி, ஈபிஎஸ்-ஓபிஎஸ் அணிக்கு இரட்டை இலை சின்னத்தை வழங்கியுள்ளார் என காங்கிரஸ் தமிழகத் தலைவர் திருநாவுக்கரசர் விமர்சித்துள்ளார்.
தேர்தல் ஆணையத்தினால் முடக்கப்பட்ட இரட்டை இலை சின்னத்திற்கு ஓபிஎஸ், ஈபிஎஸ் அணியினர் ஒன்றாக இணைந்து உரிமை கோரினார்கள். அதேபோல் டிடிவி தினகரன் தலைமையில் செயல்படும் அணியினரும் உரிமை கோரினார்கள். இரு அணிகள் தரப்பிலும் ஏராளமான ஆவணங்கள் தாக்கல் செய்யப்பட்டன. இந்நிலையில் முதலமைச்சர் பழனிசாமி அணிக்கு ஒதுக்கி தேர்தல் ஆணையம் இன்று அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
இதுதொடர்பாக தூத்துக்குடியில் செய்தியாளர்களிடம் பேசிய திருநாவுக்கரசர், “ஈபிஎஸ்-ஓபிஎஸ் அணிக்கு தான் இரட்டை இலை சின்னம் கொடுப்பார்கள் என்பது எதிர்பார்த்த ஒன்றுதான். ஏனென்றால் ஈபிஎஸ்-ஓபிஎஸ் அணியுடன் தான் பாஜக கூட்டனி அமைக்கவுள்ளனர். உள்ளாட்சி மற்றும் மக்களவைத் தேர்தலில் அந்தக் கூட்டணி அமையவுள்ளது. ஏற்கனவே அதிமுக அமைச்சர்கள் இரட்டை இலை எங்களுக்கு தான் கிடைக்கும், மேலே உள்ளவர்கள் அதைப் பார்த்துக்கொள்வார் என தெரிவித்திருந்தார்கள். அதன்படியே தற்போது மேலே உள்ள மோடி பார்த்து, ஈபிஎஸ்-ஓபிஎஸ் அணிக்கே இரட்டை இலை சின்னத்தை வழங்கியுள்ளார்” என்று கூறினார்.