தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்கெட்டு வருகிறது: திருநாவுக்கரசர்
கொலைகள் மற்றும் தற்கொலை சம்பவங்களால் தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்கெட்டு வருகிறது என காங்கிரஸ் மாநிலத் தலைவர் திருநாவுக்கரசர் தெரிவித்துள்ளார்.
கந்துவட்டி கொடுமை காரணமாக நடிகர் சசிகுமாரின் மைத்துனர் அசோக்குமார் தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் தமிழகத்தில் அனைவரது கவனத்தையும் மீண்டும் கந்துவட்டி பிரச்னை நோக்கி திரும்பச் செய்துள்ளது.
இது குறித்து கருத்து தெரிவித்துள்ள திருநாவுக்கரசர், “கந்துவட்டி காரணமாக நடைபெறும் தற்கொலைகளுக்கு, ஏற்கனவே உள்ள சட்டங்களின் அடிப்படையில் தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இதுபோன்ற சம்பவங்களால் தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்கெட்டு வருகிறது. தமிழ்நாடு கொலைகள் மற்றும் தற்கொலைகள் நடைபெறும் ஒரு களமாக, தளமாக மாறிக் கொண்டிருப்பதை தடுத்து நிறுத்துகின்ற முயற்சியில் காவல்துறை ஈடுபடவேண்டும்” என்று கேட்டுக் கொண்டார்.