திருமுருகன் காந்தியின் நீதிமன்றக் காவல் 24ம் தேதி வரை நீட்டிப்பு
குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ள மே 17 இயக்கத்தின் திருமுருகன் காந்தி உள்ளிட்ட 4 பேருக்கும் நீதிமன்றக் காவலை நீட்டித்து சென்னை எழும்பூர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கடந்த மே மாதம் 21ஆம் தேதி, இலங்கையில் நடந்த இனப் படுகொலையை கண்டித்து சென்னை மெரினா கடற்கரையில் திருமுருகன் காந்தி உள்ளிட்டோர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டு சிறையிலடைக்கப்பட்டனர். அந்த வழக்கு இன்று எழும்பூர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது திருமுருகன் காந்தி, டைசன், அருண்குமார் மற்றும் இளமாறன் ஆகிய நால்வரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். வழக்கை விசாரித்த நீதிபதி, திருமுருகன் காந்தி உள்ளிட்ட 4 பேருக்கும் நீதிமன்றக் காவலை வரும் 24ஆம் தேதி வரை நீட்டித்து உத்தரவிட்டார். திருமுருகன் காந்தி நீதிமன்றத்திற்கு அழைத்துவரப்பட்டபோது செய்தியாளரிடம் பேசுகையில், அணை பாதுகாப்பு சட்டம் கொண்டுவரப்பட்டால், முல்லைப்பெரியாறு உள்பட 3 அணைகளின் உரிமையை தமிழகம் இழக்க நேரிடும். அதுகுறித்து தமிழக எம்.பிக்கள் ஏன் நாடாளுமன்றத்தில் பேசவில்லை என கேள்வி எழுப்பினார்.