"தனிநபர் அரசை மிரட்டக்கூடாது" - டிராபிக் ராமசாமிக்கு திருமாவளவன் கண்டனம்
தனிப்பட்ட நபர் அரசை மிரட்டக்கூடாது, மக்கள் பிரச்சினைக்காக மக்களை திரட்டி போராடி வெற்றி பெற வேண்டும் என்று விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர்
திருமாவளவன் கூறினார்.
விடுதலை சிறுத்தைகள் கட்சித்தலைவர் திருமாவளவன் சென்னையில் இருந்து விமானம் மூலம் மதுரை வந்தார். விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர், பெங்களூரு சிறையில் சசிகலாவிடம் லஞ்சம் வாங்கிக் கொண்டு சிறப்பு வசதிகள் செய்து கொடுத்ததாக புகார்கள் எழுந்துள்ளன. இது குறித்து விசாரணை நடத்த அந்த மாநில முதல்வர் சித்தராமையா விசாரணை கமிஷன் அமைத்துள்ளதாகவும், அதன் பின் உண்மை நிலவரம் தெரியவரும் என்றார். சமீபத்தில் அரசுக்கு எதிராக டிராபிக் ராமசாமி தற்கொலை மிரட்டல் விடுத்த சம்பவம் குறித்து கருத்து தெரிவித்த அவர், தனிநபர் அரசை மிரட்டுவது தவறானது என்றார். மக்கள் பிரச்சினைக்காக மக்களை திரட்டி போராடி வெற்றி பெற வேண்டும் என்று கூறிய அவர், தனிப்பட்ட நபர் அரசை மிரட்டக்கூடாது என்றும் கேட்டுக்கொண்டார். கடந்த 6 மாதத்தில் தலித்துகள் மீது தொடர் தாக்குதல் நடத்தில் இதுவரை 40 பேர் கொல்லப்பட்டுள்ளதாக கூறிய அவர், இது குறித்து அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.