ஆர்.எஸ்.எஸ் மூத்த தலைவருக்கு பாரத ரத்னா விருதா? - திருமாவளவன் கண்டனம்

ஆர்.எஸ்.எஸ் மூத்த தலைவருக்கு பாரத ரத்னா விருதா? - திருமாவளவன் கண்டனம்

ஆர்.எஸ்.எஸ் மூத்த தலைவருக்கு பாரத ரத்னா விருதா? - திருமாவளவன் கண்டனம்
Published on

ஆர்.எஸ்.எஸ் மூத்த தலைவர் நானாஜிக்கு பாரத ரத்னா அறிவித்தது கண்டனத்திற்குரியது என விசிக தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

இந்திய நாட்டின் மிக உயரிய விருதாக கருதப்படுவது பாரத ரத்னா. கலை, அறிவியல், இலக்கியம், பொதுச்சேவை ஆகிய துறைகளில் சிறந்து விளங்குபவர்களுக்கு இந்த விருது வழங்கப்படுகிறது.

அதன்படி இன்று நாட்டின் 70-ஆவது குடியரசு தினம் கொண்டாடப்படுவதை அடுத்து பாரத ரத்னா விருதுகள் நேற்று முன் தினம் அறிவிக்கப்பட்டன. அதன்படி முன்னாள் குடியரசுத்தலைவர் பிரணாப் முகர்ஜி, அசாம் மாநிலத்தைச் சேர்ந்த கவிஞரான பூபென் ஹசாரிகா, சமூக ஆர்வலரான நானாஜி தேஷ்முக் ஆகியோருக்கு விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

மும்பையில் பிறந்த நானாஜி தேஷ்முக்கின் இயற்பெயர் சந்திகாதாஸ் அம்ரித்ராவ் தேஷ்முக் என்பதாகும். தனது சிறுவயதில் வறுமையில் சிக்கிய நானாஜி காய்கறி வியாபாரம் செய்து தனது கல்வியை தொடர்ந்தார். தன்னுடைய கல்லூரி காலத்தில் ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தில் தன்னை இணைத்துக்கொண்டு தீவிரமாக பணியாற்றினார். 

பின்னர் தொடங்கப்பட்ட பாரதிய ஜனதா சங்கத்தில் மூத்த தலைவர்களின் ஒருவராகவும் செயல்பட்டார். கல்வி, சுகாதாரம் உள்ளிட்ட துறைகளில் இவரின் அளப்பரிய சேவையைப் பாராட்டி ஏற்கெனவே இந்திய அரசு இவருக்கு பத்ம விபூஷண் வழங்கி கெளரவித்திருந்தது. உத்தரப் பிரதேசத்தில் இருந்து நாடாளுமன்றத்திற்கு தேர்ந்தெடுக்கப்பட்டு பணியாற்றிய இவர், பின்னர் நியமன உறுப்பினராக மாநிலங்களவையிலும் பணியாற்றிய பெருமைக்குரியவர். 2010 ஆம் ஆண்டு தனது 93ஆவது வயதில் நானாஜி தேஷ்முக் மறைந்தார்.

இந்நிலையில், ஆர்.எஸ்.எஸ் மூத்த தலைவர் நானாஜிக்கு பாரத ரத்னா அறிவித்தது கண்டனத்திற்குரியது என விசிக தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார். கருணாநிதி, ஜெயலலிதாவிற்கு பாரத ரத்னா வழங்க வேண்டும் என்ற கோரிக்கை ஏற்கப்படவில்லை எனவும் பாரத ரத்னா மட்டுமின்றி பத்ம பூஷண், பத்ம விபூஷண் விருதுகளிலும் தமிழகம் புறக்கணிக்கப்பட்டுள்ளது எனவும் தெரிவித்தார். அரசியல் நோக்கில் பயன்படுத்தி விருதுகளை மத்திய அரசு சிறுமைப்படுத்தியுள்ளது எனவும் திருமாவளவன் விமர்சித்துள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com