திட்டங்களை செயல்படுத்த தடையாக இல்லை: கிரண்பேடி விளக்கம்
புதுச்சேரியில் நலத்திட்டங்களை செயல்படுத்தத் தான் ஒருபோதும் தடையாக இல்லை என மாநில துணைநிலை ஆளுநர் கிரண்பேடி தெரிவித்துள்ளார்.
தவளக்குப்பம் தானாப்பாளையத்தில் அமைக்கப்பட்டுள்ள குடிநீர் சுத்திகரிப்பு மையம், ஆரம்ப சுகாதார நிலையம் ஆகியவற்றை கிரண்பேடி ஆய்வு செய்தார். அப்போது அவரைச் சூழ்ந்த மக்கள், ரேஷன் கடைகளில் அரிசி உள்ளிட்ட பொருட்கள் வழங்கப்படுவதில்லை என்று கூறியதோடு, மக்கள் நலத்திட்டங்களுக்கு ஏன் தடையாக இருக்கிறீர்கள் எனவும் கேள்வி எழுப்பினர்.
அதற்கு அரசியல்வாதிகள் தனக்கு எதிராக பொய்யான பரப்புரை செய்வதாகவும் துணைநிலை ஆளுநர் மாளிகைக்கு வந்து உண்மையைத் தெரிந்து கொள்ளலாம் எனவும் கிரண்பேடி பதிலளித்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், மருத்துவ மாணவர் சேர்ரக்கை விவகாரத்தில் நடைபெற்ற முறைகேட்டை அப்போதைய தலைமை செயலாளர் உள்ளிட்ட அதிகாரிகள் தடுக்க தவறியதால், சிபிஐ விசாரணை செய்ய தான் பரிந்துரைத்ததாக கூறினார்.