மாணவி கொலைக்கும் விசிகவுக்கும் சம்பந்தமில்லை - திருமாவளவன்
கடலூர் மாவட்டம் விருத்தாசலத்தில் திலகவதி என்ற மாணவி கொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சிக்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை என அக்கட்சியின் தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அருக்கே உள்ள கருவேப்பிலங்குறிச்சியை சேர்ந்த சுந்தரமூர்த்தி என்பவரின் மகள் நேற்று முன் தினம் கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்டார். கல்லூரி மாணவியான இவர் கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
இதனையடுத்து, மாணவியை கொலை செய்ததாக ஆகாஷ் என்ற இளைஞர் இன்று கைது செய்யப்பட்டார். கல்லூரியிலிருந்து திரும்பிய அந்த மாணவி தனியாக இருந்த போது ஆகாஷ் என்ற இளைஞர் வீடு புகுந்து வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். அந்த வாக்குவாதமே கொலையாக மாறியது என விசாரணையில் தெரியவந்துள்ளது.
இந்நிலையில், மாணவி கொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்து பேசிய திருமாவளவன், மாணவி கொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சிக்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை எனத் தெரிவித்தார். மேலும், “விடுதலைச் சிறுத்தைகள் கட்சி இந்தச் சம்பவத்தை வன்மையாக கண்டிக்கிறது. மாணவியின் குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறுவதைவிட்டு, பாமக அரசியல் ஆதாயம் தேடுகிறது. தங்கள் கட்சி மீது பழி சுமத்தினால் பாமக மீது வழக்கு தொடர்வேன்” என்றும் அவர் கூறியுள்ளார்.

