'கேரளாவில் காங்கிரஸ்-பாஜக இடையே ரகசிய கூட்டணி உள்ளது' – பினராயி விஜயன் விமர்சனம்

'கேரளாவில் காங்கிரஸ்-பாஜக இடையே ரகசிய கூட்டணி உள்ளது' – பினராயி விஜயன் விமர்சனம்
'கேரளாவில் காங்கிரஸ்-பாஜக இடையே ரகசிய கூட்டணி உள்ளது' – பினராயி விஜயன் விமர்சனம்

கேரளாவில் பாஜக ஆதரவுடன் சில காங்கிரஸ் தலைவர்கள் வெற்றிபெற முயற்சிப்பதாக அம்மாநில முதல்வர் பினராயி விஜயன் குற்றஞ்சாட்டியுள்ளார்.

தமிழ்நாட்டுடன் இணைந்து கேரளாவில் வரும் ஏப்ரல் 6-ம் தேதி ஒரே கட்டமாக சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறுகிறது. அதைத் தொடர்ந்து ஐந்து மாநில தேர்தல் முடிவுகளும் மே 2ஆம் தேதி அறிவிக்கப்படும். கேரளாவைப் பொறுத்தவரை இடதுசாரிகள் மற்றும் காங்கிரஸ் கட்சியினருக்கு இடையே மட்டுமே முக்கிய போட்டி நிலவுகிறது. கேரளாவில் பாஜக மூன்றாவது அணியாக உருவாகக் கடுமையாக முயன்று வருகிறது. இதற்காக மெட்ரோ மேன் ஸ்ரீதரனையும் அக்கட்சி முன்னிறுத்தி பிரசாரம் செய்து வருகிறது.

இந்நிலையில், கேரளா முதல்வர் பினராயி விஜயன் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்கட்சிகளை கடுமையாக விமர்சித்துள்ளார். ‘’கேரளாவின் எதிர்க்கட்சிகளால் திறக்கப்பட்ட கதவுகள் வழியாக மத்திய அரசின் அமைப்புகள் இழிவான பணிகளை செய்து வருகின்றனர். தங்கம் கடத்தல் வழக்கில் அமலாக்கப் பிரிவு விசாரணை தடம் மாறிச் செல்கிறது. இதில் உண்மை நிலவரம் என்ன என்பதை அறிய ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையில் நீதி விசாரணைக்கு உத்தரவிடப்படும். நீதி விசாரணையை எதிர்கட்சிகள் தொந்தரவு செய்ய வேண்டாம். பாஜகவை விட எதிர்க்கட்சித் தலைவர் (காங்கிரஸ்) ஏன் இந்த விசாரணைக்கு எதிராக நிற்கிறார்?

காங்கிரஸ், பாஜக இரண்டு கட்சிகளுமே மக்கள் விரோத கட்சிகள் தான். இரு கட்சிகளுக்கும் ரகசிய கூட்டணி உள்ளது. பாஜக ஆதரவுடன் சில காங்கிரஸ் தலைவர்கள் வெற்றி பெற திட்டமிட்டு வருகின்றன. கேரள சட்டப்பேரவைத் தேர்தலில் ஆளும் இடதுசாரி கூட்டணி மீண்டும் வெற்றி பெறும் கருத்துக்கணிப்புகள் தெரிவிக்கின்றன. இதற்காக இடதுசாரி அணி தொண்டர்கள் மகிழ்ச்சி அடையலாம். முழுமையாக பணியற்றினால் மட்டுமே முழுமையான வெற்றி கிடைக்கும். எனவே தேர்தல் பணியில் அவர்கள் கவனம் செலுத்த வேண்டும்’’ என்றார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com