"நாடு முழுவதும் வீசும் பாஜக ஆதரவு அலை" பிரதமர் நரேந்திர மோடி
நாடு முழுவதும் பாஜகவுக்கு ஆதரவான அலை வீசுவதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
அசாம் மாநிலம், சில்கரில் நடைபெற்ற தேர்தல் பரப்புரை கூட்டத்தில் பங்கேற்று பேசிய பிரதமர் நரேந்திர மோடி, தேர்தலில் யாருக்கு வாக்களிக்க வேண்டும் என்பதை மக்கள் முடிவு செய்துவிட்டதாகவும், நாடு முழுவதும் பாஜகவுக்கு ஆதரவான அலை வீசுவதாகவும் தெரிவித்தார். அனைவரின் ஒத்துழைப்புடன் குடியுரிமை சட்டத்திருத்த மசோதா நிறைவேற்றப்படும் என்ற பிரதமர் மோடி, வாக்கு வங்கியை மனதில் கொண்டு, சட்டவிரோதமாக இந்தியாவுக்குள் குடியேறுபவர்களுக்கு காங்கிரஸ் கட்சி ஆதரவளித்து வருவதாகவும் குற்றம்சாட்டினார்.
முன்னதாக, கேந்துகோனாவில் நடைபெற்ற பரப்புரைக் கூட்டத்தில் பேசிய அவர் டெல்லி துக்ளக் சாலையில் உள்ள பங்களாவில் ஒரு பெரிய தலைவர் வசிப்பதாகவும், அந்த பங்களாவுடன் தொடர்புடைய சிலரிடம் இருந்து சாக்கு மூட்டைகளில் பல கோடி ரூபாய் ரொக்கத்தை வருமான வரித் துறை கைப்பற்றியிருப்பதாகவும் ராகுல் காந்தியை மறைமுகமாக விமர்சித்தார்.
இதற்கிடையே பிரதமர் நரேந்திர மோடி வெல்ல முடியாத நபரல்ல என காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். உத்தரபிரதேச மாநிலம் ரேபரேலி மக்களவைத் தொகுதியில் போட்டியிடுவதற்காக ஐக்கிய முற்போக்கு கூட்டணி தலைவர் சோனியா காந்தி வேட்புமனுத்தாக்கல் செய்தார். சோனியாவுடன் அவரது மகனும், காங்கிரஸ் தலைவருமான ராகுல் காந்தி, மகள் பிரியங்கா காந்தி உள்ளிட்டோர் உடன் சென்றனர்.
வேட்புமனுத்தாக்கலுக்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய ராகுல் காந்தி, கடந்த ஐந்து ஆண்டுகளில் இந்திய மக்களுக்காக பிரதமர் நரேந்திர மோடி எதுவும் செய்யவில்லை எனக் குற்றம்சாட்டினார். மேலும், மோடி ஒன்றும் வெல்ல முடியாத நபர் அல்ல எனவும், தேர்தல் முடிவுகள் அதை வெளிப்படுத்தும் எனவும் ராகுல் காந்தி தெரிவித்தார்.