பைக்கில் சென்றவரை அரிவாளால் வெட்டி வழிபறி செய்ய முயன்ற இளைஞர்கள்.. அதிர்ச்சி சம்பவம்
மதுரையில் இருசக்கர வாகனத்தில் சென்ற நபரை அரிவாளால் வெட்டி வழிப்பறி செய்ய இளைஞர்கள் முயற்சி - வெளியிடப்பட்ட சிசிடிவி காட்சியால் பரபரப்பு.
மதுரை மாரியம்மன் தெப்பக்குளம் வடக்கு சாலை பகுதியில் கடந்த வாரம் 10ம் தேதி சோலை அழகு புரத்தை சேர்ந்த ராஜா என்பவர் பையுடன் இருசக்கர வாகனத்தில் பயணம் செய்வதை தெரிந்துகொண்ட அடையாளம் தெரியாத இரு இளைஞர்கள் இருசக்கர வாகனத்தில் ராஜாவை பின்தொடர்ந்து வந்துள்ளனர். இந்நிலையில், அவர் தெப்பக்குளம் பகுதியில் சிறிதுநேரம் வாகனத்தை நிறுத்திவிட்டு நின்றிருந்தார்.
அப்போது எதிர்பாராத விதமாக இருசக்கர வாகனத்தில் வந்த இளைஞர்கள் கையில் அரிவாளுடன் அவர் வைத்திருந்த பையை பிடுங்க முயன்றுள்ளனர். அப்போது அவர்களுக்கு பின்னால் வாகனத்தில் வந்த நபர் இளைஞர்கள் மீது மோதியதில் நிலைதடுமாறிய இளைஞர்கள் தொடர்ந்து ராஜாவை அரிவாளால் வெட்ட முயன்றுள்ளனர்.
இதைப்பார்த்த அக்கம் பக்கத்தினர் இளைஞர்களை தடுக்க முயன்றுள்ளனர். இந்நிலையில், இந்த சம்பவம் தொடர்பான சிசிடிவி காட்சிகள் தற்போது வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இது குறித்து தெப்பக்குளம் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். வழிப்பறியா அல்லது ராஜாவை கொலை செய்ய திட்டமா என்ற சந்தேகத்தின் அடிப்படையில் விசாரணை நடைபெற்று வருகிறது.