உயிருக்குப் போராடும் பெண் யானை... அலட்சியத்தில் வனத்துறை?
கோவை போளுவாம்பட்டி வனச்சரகத்துக்கு உட்பட்ட ஜாகிர் போரத்தி பகுதியில் நோய்வாய்ப்பட்ட பெண் யானை ஒன்று உயிருக்கு போராடி வருகிறது.
கோவை போளுவாம்பட்டி வனச்சரகத்திற்குட்பட்ட ஜாகிர் போராத்தி மலைகிராம பகுதியில், வெள்ளியங்கிரி என்பவர் சிறுவாணி பிரதான குழாய் அருகே சென்றுள்ளார். அப்போது யானை ஒன்றின் பிளிறல் சத்தம் கேட்டுள்ளது. அருகில் சென்று பார்த்தபோது நோய்வாய்பட்ட நிலையில் பெண் யானை ஒன்று எழுந்து நிற்க முடியாதபடி படுத்திருந்துள்ளது. இது தொடர்பாக வனத்துறைக்கு தகவல் அளித்துள்ளனர். இந்நிலையில் நேற்று மாலை 5 மணியளவில் சம்பவ இடத்திற்கு வந்த வனத்துறையினர் மற்றும் வனத்துறை மருத்துவர் சுகுமார் ஆகியோர் ஆய்வு மேற்கொண்டு முதல்கட்ட சிகிச்சை அளித்தனர்.
யானையின் உடல் நிலை தேற குளுக்கோஸ் வழங்கப்பட்டது. இருப்பினும் யானையின் உடல்நிலையில் எந்த முன்னேற்றம் இன்றி இருந்துள்ளது. இன்று காலை வரை அந்த யானை அதே இடத்தில் உயிருக்கு போராடி வரும் நிலையில் காலை 10.30 மணிவரை யானையை காப்பற்ற வனத்துறை தரப்பில் யாரும் வரவில்லை.
அப்பகுதி மலைவாழ்மக்கள் கூறும்போது, இதே பகுதியில் பெண்யானை நோய்வாய்பட்டு கிடந்துள்ளது. இந்த பகுதிக்கு ரோந்து பணிக்கு யாரும் வராததால், யானை உயிருக்கு போராடிக் கொண்டிருந்தது யாருக்கும் தெரியவில்லை. ஆகவே இறுதி கட்டத்தில் இருக்கும் இந்த யானையை எப்படியாவது காப்பாற்ற வேண்டும் என்றனர், இது குறித்து வனத்துறையினரிடம் கேட்ட போது, இரவு வரை சிகிச்சை பணி நடைபெற்றது,இன்று காலை இனிமேல் தான் வனத்துறையினர் வருவர்கள் என்று தெரிவித்தனர்