2ஜி வழக்கின் தீர்ப்பு காங்கிரஸின் நேர்மைக்கு சான்றாகாது: அருண் ஜேட்லி காட்டம்
இன்று வெளியான 2ஜி வழக்கின் தீர்ப்பு காங்கிரஸ் கட்சியின் நேர்மைக்கு சான்றாகாது என்று மத்திய நிதி அமைச்சர் அருண் ஜேட்லி தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து செய்தியாளர்களின் கேள்விகளுக்கு பதில் அளித்த அவர், “ஊழல் செய்வதற்காகவே கொண்டு வரப்பட்ட ஒரு கொள்கை மூலம் அரசுக்கு இழப்பு ஏற்பட்டது என்பது உண்மையே. இது உச்சநீதிமன்ற தீர்ப்பு மற்றும் அடுத்தடுத்து நடந்த அலைக்கற்றை ஏலத்தின் முடிவுகள் மூலம் தெரிய வந்துள்ளது” என்றார். எனவே 2ஜி வழக்கில் இன்று வெளியான தீர்ப்பு காங்கிரஸ் கட்சியின் நேர்மைக்கு சான்றாகாது என்று கூறினார்.
முன்னதாக, இன்று வெளியான 2ஜி வழக்கின் தீர்ப்பை காங்கிரஸ் கட்சி தலைவர்கள் பலர் வரவேற்று கருத்து தெரிவித்திருந்தனர். அதேபோல் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், 2ஜி வழக்கின் தீர்ப்பு காங்கிரசுக்கு எதிராக நடத்தி வந்த தீய பரப்புரையை முடிவுக்கு கொண்டு வந்துள்ளது என்று தெரிவித்திருந்தார். இந்நிலையில், அதனைத்தொடர்ந்து தற்போது அருண் ஜேட்லி இத்தகைய கருத்தை தெரிவித்துள்ளார்.