திமுக நடத்தும் போராட்டம் உன்னதமானது: சசிகலா சகோதரர் திவாகரன் நெகிழ்ச்சி!
நீட் தேர்வுக்கு எதிராக திமுக நடத்தும் போராட்டத்தில் தினகரன் ஆதரவு எம்.எல்.ஏக்கள் கலந்து கொள்வார்கள் என புதுக்கோட்டையில் திவாகரன் கூறியிருந்த நிலையில், ’அது தமது தனிப்பட்ட கருத்து’ என தெரிவித்துள்ளார்.
இது குறித்து கும்பகோணத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ‘நீட் தேர்வுக்கு எதிராக திமுக நடத்தும் போராட்டத்தில் தினகரன் ஆதரவு சட்டமன்ற உறுப்பினர்கள் அனைவரும் கலந்து கொள்ள வேண்டும் என்பது எனது தனிப்பட்ட கருத்து. தினகரன் அணியில் உள்ள எம்.எல்.ஏ.க்களை இடைத் தரகர்களாக நியமித்து எடப்பாடி மற்றும் ஓ.பி.எஸ். அணியினர் வளைக்க முயற்சிக்கின்றனர். அவர்களை மிரட்டுகின்றனர். விரைவில் எடப்பாடி தலைமையிலான அரசு மண்ணைக் கவ்வும். எடப்பாடி அரசு தங்கள் பதவிகளை காப்பாற்றிக் கொள்ளவே தங்கள் நேரத்தை செலவிடுவதால், விவசாயிகள், மாணவர்கள், அரசு ஊழியர்கள், பொதுமக்கள் பலரும் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.
இதனால் எடப்பாடி தலைமையிலான அரசு விரைவில் மண்ணைக் கவ்வும். நீட் தேர்வுக்காக தி.மு.க நடத்தும் போராட்டம் மற்றும் ஆலோசனைக் கூட்டத்திற்கு எங்களை அழைக்காவிட்டாலும் இப்போராட்டம் உன்னதமானது. மாணவர்கள் மற்றும் அ.தி.மு.கவினரின் மனநிலையும் இது தான். தினகரன் ஆதரவாளர்கள் மீது மட்டுமே திருவாரூர் மாவட்ட காவல் துறை அதிகாரிகள் வழக்குகளை பதிவு செய்கிறது. காவல்துறை அதிகாரிகள் அ.தி.மு.,க மாவட்ட செயலாளர்கள் போன்று செயல்படுகின்றனர்’ எனவும் அவர் குற்றம்சாட்டினார்.