மக்களவை தேர்தல்: வேட்பு மனுக்கள் மீது இன்று பரிசீலனை
மக்களவை தேர்தலில் போட்டியிட தமிழகத்தில் இருந்து ஆயிரத்து 558 வேட்பு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. அந்த மனுக்கள் மீதான பரிசீலனை இன்று நடைபெறுகிறது.
தமிழகத்தில் மக்களவை மற்றும் 18 தொகுதி சட்டப்பேரவை இடைத்தேர்தல் ஏப்ரல் 18-ஆம் தேதி நடைபெறுகிறது. இதற்கான வேட்புமனுத் தாக்கல் கடந்த 19-ஆம் தேதி முதல் நடைபெற்று வந்தது. இந்நிலையில் நேற்று மாலை 3 மணியுடன் நிறைவு பெற்றது. அதிமுக, திமுக கூட்டணி வேட்பாளர்கள், மக்கள் நீதி மய்யம் வேட்பாளர்கள், அமமுக வேட்பாளர்கள், சுயேச்சை வேட்பாளர்கள் என ஏராளமானோர் வேட்புமனுத் தாக்கல் செய்துள்ளனர்.
கடைசி நாள் வரை, தமிழகம் முழுவதும் ஆண்கள் 1385 பேர், பெண்கள் 171 பேர், மூன்றாம் பாலினத்தவர் 2 பேர் என ஆயிரத்து 558 பேர் வேட்பு மனுக்கள் தாக்கல் செய்துள்ளனர். அதே போல் 18 தொகுதி சட்டமன்ற இடைத்தேர்தலில் போட்டியிட தமிழகம் முழுவதும் 508 வேட்புமனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை இன்று நடைபெறுகிறது. வேட்பாளர்கள் தங்களது வேட்புமனுவினை திரும்பப் பெற மார்ச் 29-ஆம் தேதி கடைசி நாள் ஆகும். அத்துடன், தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இறுதி வேட்பாளர்கள் பட்டியல் மார்ச் 29 ஆம் தேதி வெளியிடப்பட உள்ளது.