“எக்ஸலண்ட்.. எக்ஸலண்ட்” தம்பிதுரை பேச்சுக்கு கைத்தட்டிய ராகுல்
மக்களவையில் ரஃபேல் விவகாரம் தொடர்பாக மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை கேள்வி எழுப்பிய போது, அதனை ராகுல் காந்தி கை தட்டி வரவேற்றார்.
பொதுத் துறை நிறுவனமான இந்துஸ்தான் ஏரோநாடிக்ஸ் லிமிடெட்டின் முன்னேற்றத்திற்கு தேவையான நடவடிக்கைகளை எடுத்திருப்பதாக கூறும் மத்திய அரசு ரபேல் விமானங்களை தயாரிக்கும் ஒப்பந்தத்தை வழங்கியிருக்கலாமே என அதிமுக எம்பி தம்பிதுரை மக்களவையில் வினவினார்.
தம்பிதுரை பேசுகையில், “எச்ஏஎல் நிறுவனத்தை காங்கிரஸ் அரசு சிறப்பாக நிர்வகிக்கவில்லை என்று கூறுகிறீர்கள். ஆனால் உங்கள் அரசு அதன் முன்னேற்றத்திற்கு நடவடிக்கை எடுத்துள்ளதாக கூறுகிறீர்கள். மேக் இன் இந்தியா திட்டத்தின் கீழ் அந்த நிறுவனத்துக்கே ரபேல் விமானங்களை செய்யும் வாய்ப்பு அளித்திருக்கலாமே? அனுபவம் இல்லாத நிதிச் சுமையில் இருக்கும் ரிலையன்ஸ்க்கு அந்த வாய்ப்பை தந்தது ஏன்?” என்றார்.
இதற்கு பதிலளித்த பாதுகாப்புத்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் முதல் 36 ரபேல் விமானங்கள் மட்டுமே கட்டப்பட்ட நிலையில் வாங்கப்படும் என்றும் மீதமுள்ள விமானங்களை தயாரிக்க எந்த நிறுவனமும் போட்டியிடலாம் என்றும் தெரிவித்தார்.
நிர்மலா சீதாராமன் பேசுகையில், “தற்போது பரஸ்பர ஒப்பந்தப்படி ரபேல் விமானம் தயாரிக்கும் உரிமம் வழங்கப்பட்டுள்ளது. முதல் 36 விமானங்கள் மட்டும் இவ்வாறு வாங்கப்படும். மீதமுள்ள விமானங்களை தயாரிக்க இனி எவரும் போட்டியிடலாம். எச்ஏஎல் போட்டியிடலாம். டிஆர்டிஓ போட்டியிடலாம். வெல்பவர்களுக்கு வாய்ப்பு கிடைக்கும். ரபேல் விமானங்களை தயாரிக்கும் நிறுவனத்தை முடிவு செய்யும் நிகழ்வு வெளிப்படையானதாக இருக்கு” என்று விளக்கம் அளித்தார்.
முன்னதாக, எச்ஏஎல் குறித்து தம்பிதுரை கேள்வி எழுப்பி பேசும் போது, அதனை எக்ஸலண்ட், எக்ஸலண்ட் என்று கூறி ராகுல் காந்தி பாராட்டினார். அதோடு, மேசையை நன்றாக தட்டியும் வரவேற்றார். அதோடு நிற்காமல் யாரையோ பார்த்து ராகுல் கண்ணடித்துள்ளார். இந்த வீடியோ தற்போது, சமூக வலைதளங்களில் வைரல் ஆகியுள்ளது. ஏற்கனவே நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடியை கட்டிபிடித்த போதும் ராகுல் கண்ணடித்திருந்தது வைரல் ஆனது குறிப்பிடத்தக்கது.