"ஒலிம்பிக் களம் கடுமையாக உள்ளது; இன்னும் பயிற்சி தேவை" - தமிழக ஒலிம்பிக் வீராங்கனைகள்

"ஒலிம்பிக் களம் கடுமையாக உள்ளது; இன்னும் பயிற்சி தேவை" - தமிழக ஒலிம்பிக் வீராங்கனைகள்

"ஒலிம்பிக் களம் கடுமையாக உள்ளது; இன்னும் பயிற்சி தேவை" - தமிழக ஒலிம்பிக் வீராங்கனைகள்
Published on

இந்திய வீரர்களுக்கு இன்னும் கூடுதல் பயிற்சி தேவை என ஒலிம்பிக் போட்டியில் கலந்து கொண்ட திருச்சி வீராங்கனைகள் தெரிவித்துள்ளனர்.

டோக்கியோவில் நடைபெற்று வரும் ஒலிம்பிக் போட்டியில் 400 மீட்டர் கலப்பு தொடர் ஓட்டத்தில் கலந்து கொண்டு, திருச்சி விமான நிலையம் வந்த திருச்சியை சேர்ந்த சுபா மற்றும் தனலட்சுமிக்கு திருச்சி விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய சுபா "ஒலிம்பிக் போட்டியில் கலந்து கொண்ட எங்களுக்கு அரசு வேலை வாய்ப்பு வழங்கிய தமிழக முதல்வருக்கு நன்றி. ஒலிம்பிக் போட்டியில் பங்குபெற கடுமையான பயிற்சி மேற்கொண்டாலும் கூட ஒலிம்பிக் களம் அதைவிட கடுமையாக இருக்கிறது. அதனால் இந்திய வீரர்களுக்கு இன்னும் கூடுதல் பயிற்சி தேவை. இன்னும் கூடுதலாக பயிற்சி பெற்று அடுத்த ஒலிம்பிக்கில் நிச்சயம் பதக்கம் வெல்வோம்.

இந்திய வீரர்களுக்கு துவக்க நிலையிலிருந்தே அடிப்படை பயிற்சி முதல் அனைத்து பயிற்சியும், ஊக்கமும் வழங்க வேண்டும். அப்படி வழங்கும் பட்சத்தில் அது, போட்டிகளில் பங்கு பெறும் விளையாட்டு வீரர்களுக்கு மிகவும் உதவிகரமாக இருக்கும். கடுமையான பயிற்சி எடுத்தும் எங்களால் வெற்றி பெற முடியவில்லை, இன்னும் அதிக பயிற்சி எடுக்க வேண்டும் என்பதை எங்களின் தோல்வி உணர்த்தி உள்ளது" என்றார். 

தொடர்ந்து பேசிய தனலட்சுமி “அரசு வேலை வழங்கியது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. என்னை களமிறக்காததற்கு எந்த தனிப்பட்ட காரணமும் இல்லை. கடந்த காலங்களில் ஒலிம்பிக் உள்ளிட்ட போட்டிகளில் தமிழகத்திற்கு பெரிய வாய்ப்பு அளிக்கப்படவில்லை. ஆனால் தற்போது வாய்ப்புகள் வருகிறது. வரும் காலங்களில் இன்னும் அதிகமான வாய்ப்புகள் வரும் என நம்புகிறோம். எங்களுக்கு தெரிந்து எந்த சாதிய பாகுபாடு இல்லை” என்றார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com