மக்களவைத் தேர்தல் - முக்கிய வேட்பாளர்களின் சொத்து விவரப் பட்டியல்
மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் முக்கிய வேட்பாளர்களின் சொத்துவிவரங்கள் குறித்த பட்டியல் வெளியாகியுள்ளன.
மக்களவைத் தேர்தல் ஏப்ரல் 11 ஆம் தேதி தொடங்கி மே 19 ஆம் தேதி வரை 7 கட்டங்களாக நடைபெறுகிறது. இதற்கான வேட்பாளர் பட்டியல் மற்றும் பிரச்சார பணிகளில் கட்சிகள் தீவிரமாக இறங்கியுள்ளன. தமிழகத்தில் இரண்டாம் கட்டமாக ஏப்ரல் 18ஆம் தேதி தேர்தல் நடக்கிறது. அன்றே இடைத்தேர்தலும் நடக்கிறது.
இதனால் தமிழகத்தின் அனைத்து கட்சிகளும் கூட்டணிகளை முடிவு செய்து வேட்பாளர்களை அறிவித்து பரப்புரையில் இறங்கிவிட்டனர். அதன்படி கன்னியக்குமரி தொகுதியில் பாஜக சார்பில் பொன்.ராதாகிருஷ்ணன் போட்டியிடுகிறார். அவரின் அசையும் சொத்து 50 லட்சத்து 56 ஆயிரத்து 298 ரூபாய் எனவும் அசையா சொத்து 6 கோடியே 99 லட்சத்து 40 ஆயிரத்து 155 ரூபாய் எனவும் பிரமாணப்பத்திரத்தில் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதேபோல், ஸ்ரீபெரும்புதூர் தொகுதியில் திமுக சார்பில் போட்டியிடும் டி.ஆர். பாலுவின் அசையும் சொத்து ஒரு கோடியே 39 லட்சத்து 39 ஆயிரத்து 461 ரூபாய் என்றும் அசையா சொத்து 9 கோடியே 51 லட்சம் ரூபாய் மதிப்பில் இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
கள்ளக்குறிச்சி தொகுதியில் அதிமுக கூட்டணியில் உள்ள தேமுதிக வேட்பாளர் சுதீஷ் போட்டியிடுகிறார். அசையும் சொத்துகளின் மதிப்பு 6 கோடியே 81 லட்சம் 25 ஆயிரத்து 119 ரூபாய் இருப்பதாகவும் அசையா சொத்துகளின் மதிப்பு 25 கோடியே 47 லட்சத்து 86 ஆயிரத்து 106 ரூபாய் என்றும் தெரிவித்துள்ளார்.
தென் சென்னை தொகுதி அதிமுக வேட்பாளர் ஜெயவர்தன் 49 லட்சத்து 66 ஆயிரத்து 988 ரூபாய்க்கு அசையும் சொத்து உள்ளதாகவும் 2 கோடியே 40 லட்சத்து 61 ஆயிரத்து 710 ரூபாய் மதிப்புள்ள அசையா சொத்து இருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
தேனி மக்களவைத் தொகுதி அதிமுக வேட்பாளர் ரவீந்திரநாத்குமார் தாக்கல் செய்துள்ள பிரமாணப் பத்திரத்தில், அசையும் சொத்தாக 4 கோடியே 16 லட்சத்து 27 ஆயிரத்து 224 ரூபாய் இருப்பதாகவும் அசையா சொத்துகளின் மதிப்பு ஒரு கோடியே 90 லட்சத்து 73 ஆயிரத்து 303 ரூபாய் எனவும் தெரிவித்துள்ளார்.