லிங்காயத் சமூகத்தை தனி மதமாக அங்கீகரித்தது கர்நாடகா அரசு
கர்நாடகாவில் ஒரு பிரிவினர் லிங்காயத் என்ற பெயரில் தனி வழிப்பாட்டு முறையை பின்பற்றுகின்றனர். லிங்காயத் பிரிவை 12 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த பசவர் என்பவர் தோற்றுவித்தார். லிங்காயத்துகள் தங்களை வீர சைவர்கள் என்று அழைத்து கொள்வர். லிங்காயத்தைத் தனிமதமாக அறிவிக்கக் கோரி நீண்ட காலமாக போராட்டங்கள் நடைபெற்று வந்தன. இந்த விவகாரம் 2018 கர்நாடக சட்ட மன்றத் தேர்தல் முடிவுகளைத் தீர்மானிக்கும் காரணியாக இருக்கும் என்று கூறப்பட்டது.
தேர்தலுக்கு இன்னும் ஒரே மாதம் உள்ள நிலையில், லிங்காயத் சமுதாயத்தினரை தனி மதத்தினராக கர்நாடகா அமைச்சரவை அங்கீகரித்துள்ளது. இதனையடுத்து, லிங்காயத் சமுதாயத்தினரை தனி மதத்தினராக அங்கீகரிக்கும் பரிந்துரையை சித்தராமையா தலைமையிலான காங்கிரஸ் அரசு மத்திய அரசுக்கு அனுப்பி வைத்துள்ளது. லிங்காயத் சமுதாயத்தினர், சித்தராமையா அரசு இடையே ஒரு மாதத்திற்கு மேலாக பேச்சுவார்த்தை நடைபெற்று வந்த நிலையில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
அமைச்சரவை கூட்டத்திற்கு பிறகு செய்தியாளர்களிடம் பேசிய கர்நாடக நீர் வளத்துறை அமைச்சரும், லிங்காயத் தலைவருமான எம்.பி.பட்டேல், “எங்களது நீண்ட நாள் போராட்டத்திற்கு ஒரு நல்ல முடிவு கிடைத்துள்ளது. லிங்காயத்துகள் இந்துக்கள் அல்ல என்பதில் நாங்கள் உறுதியுடன் இருக்கிறோம். எங்களது கோரிக்கையை மத்திய அரசு ஏற்றுக் கொள்ளும் என்று நம்புகிறோம்” என்றார்.
லிங்காயத்துக்களின் இந்த கோரிக்கைக்கு ஆர்.எஸ்.எஸ் அமைப்பு எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. இது இந்து மதத்தினரில் பிரிவினையை உண்டாக்கும் என்று அவர்கள் குற்றம்சாட்டி வருகின்றனர்.