புதிதாக சேர்ந்த மாணவர்களை ஊக்கப்படுத்த புது செல்போன்: இன்ப அதிர்ச்சி கொடுத்த ஹெட் மாஸ்டர்!
விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள அரசு பள்ளியில் புதிதாக சேரும் மாணவர்களை ஊக்குவிக்கும் விதமாக அவர்களுக்கு தனது சொந்த செலவில் கைப்பேசி வாங்கி கொடுத்த தலைமை ஆசிரியர்.
தமிழகத்தில் கொரோனா நோய் தாக்குதல் காரணமாக சுமார் ஐந்து மாதங்களுக்கு மேலாக பள்ளி மற்றும் கல்லூரிகள் மூடப்பட்டுள்ளன. இந்நிலையில் ஒன்றாம் வகுப்பு முதல் 10 வகுப்புவரை அரசு பள்ளியில் சேர்க்கை நடைபெறும் என பள்ளிக்கல்வித் துறை அறிவித்திருந்தது.
இந்நிலையில் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள படிக்காசு வைத்தான் பட்டியில் ஊராட்சி தொடக்கப்பள்ளி செயல்பட்டு வருகிறது. 50க்கும் மேற்பட்டோர் படிக்கும் இந்த பள்ளியின் தலைமை ஆசிரியராக ஜெயக்குமார் என்பவர் பணிபுரிந்து வருகிறார்.
இன்று 2020 - 21ஆம் ஆண்டுக்கான புதிய மாணவர்கள் சேர்க்கை நடைபெற்றுக் கொண்டிருந்தது. அப்போது புதிய மாணவர்களின் சேர்க்கையை ஊக்கப்படுத்தும் விதமாக புதிதாக பள்ளியில் சேர்ந்த ஒன்றாம் வகுப்பு மாணவர்கள் நான்கு பேருக்கு சுமார் 10 ஆயிரம் மதிப்புள்ள கைப்பேசியினை வழங்கி வரவேற்றார். ஆசிரியர் ஜெயக்குhரின் செயல்பாடு அந்தப் பகுதி மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.