வீட்டிற்குள் புகுந்த் 10 அடி நீளமுள்ள ராஜநாகம்... அலறியடித்து ஓடிய குடும்பத்தினர்
விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிப்புத்தூர் அருகே மலைவாழ் மக்கள் வசிக்கும் வீட்டிற்குள் புகுந்த 10 அடி நீளமுள்ள ராஜநாகம்.
ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரப் பகுதியான செண்பகதோப்பு பகுதியில் ஏராளமான வனவிலங்குகள் வசித்து வருகின்றன. குறிப்பாக புலிகள், சிறுத்தைகள், கரடிகள், கருஞ் சிறுத்தைகள், காட்டெருமைகள் மற்றும் கொடிய விஷமுள்ள ராஜநாகங்கள் மற்றும் மிகப்பெரிய அளவிலான மலைப்பாம்புகள் அதிக அளவில் காணப்படுகின்றன.
இந்நிலையில், 10 அடி நீளமுள்ள ராஜநாகம் செண்பகத்தோப்பு மலைவாழ் மக்கள் குடியிருப்பு பகுதியில் உள்ள வீடு ஒன்றில் நுழைந்ததைக் கண்டு வீட்டில் இருந்தவர்கள் அலறி அடித்துக் கொண்டு வெளியே ஓடிவந்தனர். பின்பு ராஜநாகம் வெளியே எங்கும் தப்பி விடாதபடி வீட்டின் கதவை பூட்டி விட்டனர்.
அதனைத் தொடர்ந்து வனத்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த வனத்துறையினர் ராஜநாகத்தை லாவகமாக பிடித்து அதே செண்பகத்தோப்பில் அடர்த்தியான வனப்பகுதிக்குள் கொண்டு சென்று விட்டனர்.