மக்களவைத் தேர்தல் : நாளை முதல் கட்ட வாக்குப்பதிவு
மக்களவைத் தேர்தல் முதல் கட்ட வாக்குப்பதிவு நாளை நடைபெறும் நிலையில் அதற்கான ஏற்பாடுகள் நிறைவடைந்துள்ளன.
நாடெங்கும் உள்ள 543 மக்களவைத் தொகுதிகளுக்கு 7 கட்டமாக தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் முதல் கட்ட தேர்தல் நாளை நடைபெறுகிறது. 18 மாநிலங்களிலும் 2 யூனியன் பிரதேசங்களிலும் உள்ள 91 மக்களவைத் தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெறுகிறது.
ஆந்திரா, தெலங்கானா ஆகிய மாநிலங்களில் உள்ள அனைத்து தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இது தவிர உத்தரப்பிரதேசம், மகாராஷ்டிரா, பீகார், மேற்கு வங்கம் உள்ளிட்ட மாநிலங்களில் முதல் கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறுகிறது.
ஆந்திரா, அருணாச்சல பிரதேசம், சிக்கிம் ஆகிய மாநில சட்டப்பேரவைகளுக்கு ஒரே கட்டமாகவும் ஒடிஷா சட்டப்பேரவைக்கு முதல் கட்டமாகவும் நாளை வாக்குப்பதிவு நடைபெறுகிறது.
முதல் கட்ட மக்களவைத் தேர்தலில் மொத்தம் ஆயிரத்து 279 வேட்பாளர்கள் களம் காண்கின்றனர். இதில் அதிகபட்சமாக தெலங்கானாவில் இருந்து 443 வேட்பாளர்களும் ஆந்திராவில் இருந்து 319 வேட்பாளர்களும் போட்டியிடுகின்றனர். குறைந்த பட்சமாக லட்சத்தீவில் 6 வேட்பாளர்கள் நிற்கின்றனர்.
முதல் கட்டத் தேர்தலில் மொத்தம் 14 கோடியே 22 லட்சம் வாக்காளர்கள் தங்கள் வாக்குகளை பதிவு செய்ய உள்ளனர். இவர்கள் வாக்களிப்பதற்காக ஒரு லட்சத்து 70 ஆயிரத்து 664 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன.