தோனி, ரோகித், கோலி இல்லாத முதல் ஐபிஎல் பைனல்!

தோனி, ரோகித், கோலி இல்லாத முதல் ஐபிஎல் பைனல்!
தோனி, ரோகித், கோலி இல்லாத முதல் ஐபிஎல் பைனல்!

ஐபிஎல் 2022 சீசனின் இறுதிப் போட்டி தோனி, ரோஹித் ஷர்மா அல்லது விராட் கோலி போன்ற முன்னணி நட்சத்திரங்கள் இல்லாமல் நடைபெற உள்ளது.

இரண்டு மாதங்களாக களைகட்டிய 15ஆவது ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் கிளைமேக்ஸ் இன்று. ஐபிஎல் கிரிக்கெட்டின் முதல் சாம்பியனான ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும், அறிமுக அணியான குஜராத் டைட்டன்ஸ் அணியும் இம்முறை கோப்பைக்காக பலப்பரீட்சை நடத்துகின்றன. உலகின் மிகப்பெரிய கிரிக்கெட் மைதானமான அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் இறுதிப் போட்டி இன்றிரவு 8 மணிக்கு தொடங்குகிறது.

இதற்கு முன்பு கோப்பைகளை பலமுறை வென்று சாம்பியன்களாக வலம்வந்த மும்பை இந்தியன்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழையாமல் வெளியேறிவிட்டது. ஆனால் யாரும் எதிர்பாராத வகையில் ராஜஸ்தான், குஜராத் அணிகள் இறுதிப் போட்டிக்குள் நுழைந்தன. முன்னணி அணிகள் மட்டுமல்ல! முன்னணி வீரர்கள் இல்லாத ஐபிஎல் பைனலும் இதுவே!

மகேந்திர சிங் தோனி, ரோகித் ஷர்மா, விராட் கோலி உள்ளிட்ட முன்னணி நட்சத்திரங்களும் இல்லாமல் அரங்கேற உள்ளது இறுதிப் போட்டி. தோனி தலைமையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 2008, 2010, 2011, 2012, 2013, 2015, 2018, 2019 மற்றும் 2021 ஆம் ஆண்டுகளில் இறுதிப் போட்டியை எட்டி 4 முறை கோப்பையை வென்றது. இது தவிர 2017 ஆம் ஆண்டு இறுதிப் போட்டிக்கு வந்த ரைசிங் புனே சூப்பர்ஜெயண்ட்ஸ் அணியிலும் தோனி இடம் பெற்றிருந்தார். நடைபெற்ற 14 ஐபிஎல் பைனல்களில் 10 போட்டிகளில் விளையாடியுள்ளார் தோனி.

ரோகித் ஷர்மா 2010, 2013, 2015, 2017, 2019 மற்றும் 2020 ஆகிய ஆறு தொடர்களில் இறுதிப்போட்டிகளில் விளையாடி 5 முறை கோப்பையை வென்றுள்ளார். விராட் கோலி 2009, 2011, 2016 ஆகிய 3 தொடர்களில் இறுதிப்போட்டிகளில் விளையாடியுள்ளார். 2014 ஆம் ஆண்டு ஐபிஎல் பைனல் தவிர மற்ற அனைத்து பைனல்களிலும் தோனி, ரோகித், கோலி ஆகிய மூவரில் ஒருவராது குறைந்தபட்சம் இடம்பெற்றிருந்தனர்.

2014 ஆண்டு ஐபிஎல் தொடர் இறுதிப்போட்டியில் இந்திய கிரிக்கெட் வீரர் கவுதம் கம்பீர் கொல்கத்தா அணிக்காக விளையாடினார். ஆனால் இன்று நடைபெற உள்ள இறுதிப்போட்டியில் முன்னணி நட்சத்திரங்கள் இல்லாமல் யாரும் விளையாடவில்லை!

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com