The Dhoni Touch - அதே தோனி; அதே பிரம்மிப்பு!

The Dhoni Touch - அதே தோனி; அதே பிரம்மிப்பு!
The Dhoni Touch - அதே தோனி; அதே பிரம்மிப்பு!

மும்பை இந்தியன்ஸ் அணியை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தோற்கடித்திருக்கிறது. இதுவே கொண்டாட்டத்தை கொடுக்கக்கூடிய செய்திதான். ஆனால், இந்த போட்டியை சென்னை அணிக்காக வென்று கொடுத்திருப்பது தோனி எனும் போது அந்த கொண்டாட்டம் இன்னும் இன்னும் அதிகமாகிவிடுகிறது.

சென்னை அணி கடைசியாக நடந்த மெகா ஏலத்தில் எடுத்திருக்கும் அணியின் வீரர்களின் சராசரி வயது 28. ஆனால், தோனிக்கு 40 வயதாகிறது. இந்த சீசனில் ஆடும் வீரர்களிலேயே தோனிதான் முதியவர். சர்வதேச போட்டிகளிலிருந்து ஓய்வு பெற்றுவிட்டார். உள்ளூர் போட்டிகளில் ஆடுவதே இல்லை. ஐ.பி.எல்லிலுமே கிரீடத்தை தனது தளபதியின் கையில் கொடுத்துவிட்டு ஓய்வை எதிர்நோக்கி கடைசி சுற்றில் ஓட தொடங்கிவிட்டார். ஆனால், இன்னமும் 2010 இல் பார்த்த அதே தோனி அப்படியே இருக்கிறார். தர்மசாலாவில் 2010 இல் தோனி ஆடிய ஆட்டம் அப்படியே நினைவில் நிற்கிறது. பஞ்சாபிற்கு எதிரான போட்டி அது. சென்னை அணியின் கடைசி லீக் போட்டி. அந்த போட்டியை வென்றால் சென்னை அணியால் அரையிறுதிக்கு செல்ல முடியும். இல்லையேல் அப்படியே மூட்டை முடிச்சை கட்டிக்கொண்டு ஊருக்கு கிளம்ப வேண்டியதுதான். பஞ்சாப் முதலில் பேட் செய்து 190+ ஸ்கோரை எடுத்தது. சென்னை சேஸிங். பெரிய ஸ்கோர் என்பதால் போட்டி கடைசி ஓவர் வரை செல்கிறது. கடைசி ஓவரில் 16 ரன்கள் தேவை. தோனி ஸ்ட்ரைக்கில் இருப்பார். இர்ஃபான் பதான் வீசிய அந்த ஓவரில் முதல் நான்கு பந்துகளிலேயே 16 ரன்களை எடுத்து சென்னையை தோனி அரையிறுதிக்கு அழைத்து சென்றிருப்பார். 108 மீட்டருக்கு தோனி அடித்த அந்த வின்னிங் ஷாட் இன்னமும் கண்ணுக்குள்ளேயே நிற்கிறது.

அப்போது தோனிக்கு 28 வயதுதான்! காலங்கள் உருண்டோடி இப்போது தோனிக்கு 40 வயதாகிவிட்டது. ஆனால், இன்னமும் எதுவும் மாறவில்லை. தரம்சாலாவில் கடைசி ஓவரில் என்ன நடந்ததோ அதுதான் டி.ஒய்.பாட்டீல் ஸ்டேடியத்தின் கடைசி ஓவரிலும் நடந்திருக்கிறது. இர்ஃபான் பதானின் கண்களில் தெரிந்த அந்த ஏமாற்றம் அப்படியே உனத்கட்டின் கண்ணிலும் தெரிகிறது. தரம்சாலாவில் கொடுத்த அதே பூரிப்பை டீ.ஒய்.பாட்டீல் ஸ்டேடியத்திலும் தோனியால் கொடுக்க முடிகிறது. அதே மாதிரியே சிக்சர்கள், அதே மாதிரியே பவுண்டரிகள், அதே மாதிரியே நான்கே பந்துகளில் 16 ரன்கள். அதேமாதிரியே என்றைக்கும் நினைவில் நிற்கப்போகும் மற்றுமொரு புல்லரிக்கும் சித்திரம்!

மீட்பராக ராக்கி பாய் வந்த பிறகும், ஆதிராவின் வாள் கொடுக்கும் அச்சம் தணியாமல் அஞ்சி மிரளும் KGF வாசிகளுக்கு ஒப்பாகத்தான் நேற்று மும்பை இந்தியன்ஸ் அணி தெரிந்தது. வாளேந்தி அவர்களுக்கு அச்சத்தை கொடுத்த ஆதிரவாக களத்தில் நின்றது தோனி. டெத் ஓவர்களின் என்னனென்னவோ செய்து பார்த்தார்கள். ஆனால், களத்தில் தோனியின் இருப்பு கொடுத்த மிரட்சியே மும்பையின் எல்லா சூட்சமங்களையும் தூள் தூளாக்கியது.

கடைசி நொடி வரை ஆட்டத்தை இழுத்துச் சென்று ஒட்டுமொத்த அழுத்தத்தையும் பௌலரின் தலைக்கு மேல் ஏற்றிவிட்டு கூலாக வின்னிங் ஷாட் அடிக்கும் அதே சம்பவத்தைதான் நேற்றும் நிகழ்த்தியிருந்தார். லாங் ஆன், லாங் ஆஃப், டீப் மிட் விக்கெட், டீப் ஸ்கொயர் என கட்டம் கட்டி 'முடிந்தால் எல்லைக்கோட்டை தாண்டி பாருங்கள்' என சவால்விடும் வகையில் உனத்கட் வீசிய அந்த முதல் பந்தை அவரின் தலைக்கு மேலேயே சிக்சராக்கியிருந்தார். அடுத்த பந்து. அதே யார்க்கருக்கான ஃபீல்ட் செட்டப்தான். வட்டத்திற்குள்ளேயே ஃபைன் லெக்கும் தேர்டு மேனும் நிற்கிறார். தோனி யார்க்கரை எதிர்பார்க்கிறார். ஆனால், யார்க்கரை வீசாமல் 120 கி.மீ குறைவேகத்தில் ஒரு ஷார்ட் பாலை வீசி தோனிக்கு உனத்கட் சர்ப்ரைஸ் கொடுக்கிறார். யார்க்கரை எதிர்பார்த்து ஏமாந்துபோன தோனி, ஷார்ட் பாலை சரியாக மடக்கி ஆடாமல் டாப் எட்ஜ் ஆகி பாய்ண்ட் ஃபீல்டரிடமோ ஷார்ட் ஃபைன் லெக்கிடமோ கேட்ச் கொடுத்து அவுட் ஆகிறார்.

இப்படி ஒரு குட்டி குறும்படம் உனத்கட்டின் மூளைக்குள் அந்த பந்தை வீசுவதற்கு முன்பு ஓடியிருக்கக்கூடும். தவறே இல்லை. உனத்கட் நினைத்ததை போலவே அரங்கேறியிருக்கக்கூடும், எதிர்திசையில் வேறு ஏதாவது அனுபவமற்ற பேட்ஸ்மேன் நின்றிருந்தால்! ஆனால், இங்கே நிற்பது தோனி. உனத்கட் வீசிய முந்தைய பந்தில் தோனி அடித்த சிக்சர், ஐ.பி.எல் இன் கடைசி ஓவர்களில் மட்டும் அவர் அடித்திருந்த 51 வது சிக்சர் ஆகும். இதுபோக உனத்கட்டிற்கு எதிராக மட்டும் தோனி இதுவரை 230 ஸ்ட்ரைக் ரேட்டில் ஆடியிருக்கிறார். ஆக, உனத்கட்டின் மூளைக்குள் ஓடிய அந்த குறும்படத்தின் பாசிட்டிவ் க்ளைமாக்ஸ் அவரின் கையிலிருந்து பந்து ரிலீசான அடுத்த நொடியே ஆன்டி க்ளைமாக்ஸாக மாறிப்போனது. ஃபைன் லெக் உள்ளே நிற்க ஷார்ட்பாலை கொஞ்சம் திருப்பிவிட்டாலே பவுண்டரி என முடிவு செய்து கண நேரத்தில் காரியத்தை சாதித்து முடித்தார் தோனி.

இப்போது, கடைசி 2 பந்துகளில் 6 ரன்கள் தேவை. கடைசிக்கு முந்தைய பந்தை உனத்கட் லெக் ஸ்டம்ப் லைனில் சரியான யார்க்கராக இறக்கினார். லெக் சைடில் தட்டிவிட்டு தோனி இரண்டு ரன்களை எடுக்கிறார். கடைசி பந்தில் நான்கு ரன்கள் தேவை. இப்படி ஒரு சூழலில் ஆட்டம் வந்து நின்றால் அழுத்தம் என்பது எப்போதுமே தோனிக்கு எதிராக நிற்கும் பௌலருக்குதான்! உனத்கட் படபடப்பாகிறார். வேகவேகமாக ஓடி வந்து அந்த கடைசிக்கு முந்தைய பந்தை போன்றே ஒரு யார்க்கருக்கு முயல்கிறார். ஆனால், அது லோ ஃபுல் டாஸாக மாறிப்போனது. ஷார்ட் ஃபைன் லெக்குக்கும் டீப் ஸ்கொயருக்கும் இடையில் தோனி தட்டிவிட பந்து சீறிப்பாய்ந்தது. அவ்வள்வுதான், கொண்டாட்டம் தொடங்கிவிட்டது.

தோனியை தவிர வேறு வீரர் அங்கு நின்றிருந்தாலும், உனத்கட் அந்த கடைசி பந்தை அதன் முந்தைய பந்தை போன்ற ஒரு நல்ல யார்க்கராக லெக் ஸ்டம்ப்பில் இறக்கியிருக்கக்கூடும். ஆதிராவாக வாளேந்தி நின்ற தோனியின் மீதான மிரட்சிதாம் அதை நிகழவிடாமல் செய்தது.

இந்த ஃபினிஷிங் மட்டுமில்லை. தோனியின் அறிவுரையோடு நேராக வைக்கப்பட்ட ஃபீல்ட் செட்டப்பும், அதற்கே தன்னுடைய விக்கெட்டை இரையாக்கி சென்ற பொல்லார்டுமே அந்த 28 வயது தோனியை மீண்டும் நினைவுப்படுத்தி சென்றனர். The Vintage Dhoni Touch!!

அதே தோனி; அதே பிரம்மிப்பு!

-உ.ஸ்ரீராம்

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com