இயந்திரத்தில் சிக்கி துண்டான துப்புரவு பணியாளரின் கை.. கருணை கொலை செய்ய அனுமதி கோரி மனு
கருணை கொலை செய்ய அனுமதி வழங்க கோரி தஞ்சை ஆட்சியரிடம் தற்காலிக துப்புரவு பணியாளர் மனு அளித்துள்ளார்.
தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை நகராட்சி அலுவலகத்தில் தற்காலிக தூய்மை பணியாளராக பணியாற்றியவர் ரேவதி. இவர் கோரோனா ஊரடங்கு காலத்தில் அங்குள்ள மக்கும், மக்கா குப்பையை தரம் பிரித்தெடுக்கும் நுண் உரம் செயலாக்க மையத்தில் உள்ள இயந்திரத்தில் வேலை செய்து கொண்டு இருக்கும் போது எதிர்பாராத விதமாக அவரது கை இயந்திரத்தில் சிக்கி துண்டானது.
உடனே அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக தஞ்சை மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அதனைத் தொடர்ந்து தற்போது சிகிச்சை முடிந்து பட்டுக்கோட்டை வடக்குத் தெருவில் உள்ள அவரது வீட்டில் ஓய்வு எடுத்து வருகிறார். இந்நிலையில் தஞ்சை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு ஒன்று அளித்தார்.
அதில் தான் வேலையின்றி மிகவும் சிரமப்பட்டு வருவதாகவும், இரண்டு குழந்தைகளை வைத்துக்கொண்டு வருமானம் இன்றி தவித்து வருவதாகவும் உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தும், எந்தவித நடவடிக்கையுன் எடுக்காததால், தன்னை கருணை கொலை செய்ய வேண்டும் என மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தார்.
கருணை கொலை செய்ய அனுமதி வேண்டும், இல்லையென்றால் அரசு வேலை வழங்க வேண்டும் என மனுவில் தெரிவித்திருந்தார். கருணை கொலை செய்ய வேண்டும் என கண்ணீர் மல்க மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தது அனைவரையும் கண்கலங்க வைத்ததுள்ளது.