அதிமுகவில் அடுத்தடுத்து: நீதி விசாரணை முதல் நீக்கம் வரை!

அதிமுகவில் அடுத்தடுத்து: நீதி விசாரணை முதல் நீக்கம் வரை!

அதிமுகவில் அடுத்தடுத்து: நீதி விசாரணை முதல் நீக்கம் வரை!

தினகரன் ஆதரவு எம்.எல்.ஏக்கள் 18 பேர் தகுதிநீக்கம் செய்யப்பட்ட நிலையில், ஜெயலலிதா மரணத்திற்கு நீதி விசாரணை நடைபெறும் என்று எடப்பாடி பழனிசாமி அறிவித்தது முதல் நடந்த சம்பவங்களைப் பார்க்கலாம்.

உள்ளாட்சித் தேர்தலை நடத்த வேண்டிய அழுத்தம் அதிகரிக்கவே, கட்சி மற்றும் இரட்டை இலைச் சின்னத்தை மீட்க ஓபிஎஸ்-ஈபிஎஸ் அணிகள் இணைவதற்கான பேச்சுவார்த்தைகள் தொடங்கின. சசிகலா, தினகரன் ஆகியோரை நீக்க வேண்டும், ஜெயலலிதா மறைவுக்கு நீதி விசாரணை வேண்டும் என்ற பன்னீர்செல்வத்தின் நிபந்தனைகளை எடப்பாடி பழனிசாமி அணியினர் ஏற்கத் தொடங்கினர். அதன் ஒரு பகுதியாக, டிடிவி தினகரனின் நியமனம் செல்லாது என்று அதிமுக தலைமையகத்தில் கூடிய கட்சி நிர்வாகிகள் கூட்டத்தில் அறிவிக்கப்பட்டது. ஜெயலலிதா மரணம் குறித்து ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் விசாரணை குழு அமைக்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டது.

இதையடுத்து, 19 எம்எல்ஏக்கள் தினகரனுக்கு ஆதரவு தெரிவித்ததுடன், முதலமைச்சர் பழனிசாமிக்கு அளித்த ஆதரவை திரும்பப் பெறுவதாக ஆளுநரிடம் ஆகஸ்ட் 22ஆம் தேதி கடிதம் அளித்தனர். அத்துடன், 19 எம்எல்ஏக்களும் புதுச்சேரியில் உள்ள விடுதிக்கு சென்று தங்கினர். பழனிசாமியை முதலமைச்சர் பதவியில் இருந்து நீக்கிவிட்டு, சபாநாயகர் தனபால் முதல்வராக வேண்டும் என்று அவர்கள் கோரிக்கை வைத்தனர். இதற்கு அவர்கள் விளக்கம் அளிக்க வேண்டும் என சபாநாயகர் நோட்டீஸ் அனுப்பினார்.

இதையடுத்து, அரசு பெரும்பான்மை இழந்ததாகக் கூறி, நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த உத்தரவிடுமாறு ஆளுநரை எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் சந்தித்து வலியுறுத்தினார். ஆளுநர் எந்த பதிலும் தெரிவிக்காததால், டெல்லியில் திமுக மற்றும் கூட்டணிக் கட்சியினர் குடியரசுத் தலைவரை சந்தித்து மனு அளித்தனர். மீண்டும் ஆளுநர் வித்யாசாகர் ராவை ஸ்டாலின் நேரில் சந்தித்து நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த உத்தரவிடுமாறு கோரினார். இதே கோரிக்கையை திருமாவளவன் உள்ளிட்ட எதிர்க்கட்சியினரும் முன்வைத்தனர். ஆனால், இது அதிமுகவின் உட்கட்சி விவகாரம் என்றும், முதலமைச்சரை மாற்ற ஆளுநருக்கு அதிகாரமில்லை என்றும் ஆளுநர் தரப்பில் கூறப்பட்டதாக திருமாவளவன் தெரிவித்தார்.

இரட்டை இலை தொடர்பாக தங்கள் கருத்தையும் கேட்க வேண்டும் என்று தினகரன் தரப்பில் தேர்தல் ஆணையத்தில் மனு அளிக்கப்பட்டது. இந்த நிலையில், ஆளுநருக்கு உத்தரவிடக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் திமுக தரப்பில் தொடரப்பட்ட வழக்கில், தினகரன் ஆதரவாளர் வெற்றிவேலும் இணைந்து மனு தாக்கல் செய்தார். நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த உத்தரவிடக் கோரி ஆளுநர் வித்யாசாகர் ராவை டிடிவி தினகரனும் கடந்த 10ஆம் தேதி சந்தித்து வலியுறுத்தினார். இந்த பரபரப்பான சூழலில், தடை கேட்டு வழக்குகள் தொடரப்பட்ட நிலையில், நீதிமன்றம் தடை விதிக்காததால் செப்டம்பர் 12ஆம் தேதி அதிமுகவின் செயற்குழு மற்றும் பொதுக்குழுக் கூட்டம் நடைபெற்றது.

அதில் கட்சியின் ஒருங்கிணைப்பாளராக ஓ.பன்னீர்செல்வமும், இணை ஒருங்கிணைப்பாளராக பழனிசாமியும் பொதுச்செயலாளருக்குரிய அதிகாரங்களுடன் செயல்படுவார்கள் எனத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மேலும், பொதுச்செயலாளராக சசிகலாவின் நியமனம் ரத்து செய்யப்படுவதாகவும், டிடிவி தினகரனின் அறிவிப்புகள் செல்லாது என்றும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இதையடுத்து எடப்பாடி பழனிசாமியும், ஓ.பன்னீர்செல்வமும் விலகாவிட்டால், அதிமுக ஆட்சியை கிள்ளி எறியவும் தயாராகி விட்டதாக தினகரன் தெரிவித்தார். மீண்டும் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்குமாறு உத்தரவிடப்பட்ட நிலையில், எம்எல்ஏக்கள் கர்நாடகாவின் குடகு மலையில் உள்ள விடுதிக்குச் சென்றனர். இதற்கிடையே, தினகரன் ஆதரவு எம்எல்ஏக்களில் ஒருவரான கம்பம் ஜக்கையன் சபாநாயகரை சந்தித்து விளக்கம் அளித்ததுடன், முதலமைச்சர் பழனிசாமிக்கு ஆதரவும் தெரிவித்தார். அதேநேரம், இரட்டை இலைச் சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்ற கூட்டணி கட்சி எம்எல்ஏக்கள் ஆதரவு கிடைத்திருப்பதாக தினகரன் தெரிவித்தார்.

இந்தச் சூழலில், எதிர்க்கட்சிகளின் அழுத்தம் மற்றும் நீதிமன்ற வழக்குகளால் பேரவையில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த வேண்டிய சூழ்நிலை ஏற்படுவதை உணர்ந்து அரசு தரப்பில், தினகரன் ஆதரவு 18 எம்எல்ஏக்கள் மீதும் நடவடிக்கை எடுக்க கொறடா சார்பில் சபாநாயகரிடம் பரிந்துரை செய்யப்பட்டது. கட்சி மாறாத காரணத்தால் தங்கள் மீது நடவடிக்கை எடுக்க முடியாது என்று தினகரன் தரப்பில் கூறப்பட்டு வந்த நிலையில், 18 எம்எல்ஏக்களை தகுதி நீக்கம் செய்து சபாநாயகர் தனபால் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com