நள்ளிரவில் திடீரென தீப்பற்றி எரிந்த கார்... மர்மம் குறித்து போலீசார் விசாரணை
சென்னை குரோம்பேட்டை அருகே நள்ளிரவில் மர்மமான முறையில் கார் தீப்பற்றி எரிந்த சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
சென்னை குரோம்பேட்டை லட்சுமிபுரம், குளக்கரை தெருவை சேர்ந்தவர் சவுமிக் பானர்ஜி. இவர் தனியார் கார் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். இவரது வீட்டில் கார் நிறுத்துவதற்கு இடம் இல்லாததால் அதே பகுதியை சேர்ந்த பாரதிதாசன் தெருவில் வசிக்கும் சதீஷ்குமார் என்பவரது வீட்டில் மாதம் 1000 ரூபாய் கொடுத்து காரை பார்க்கிங்கில் நிறுத்தி வருகிறார்.
இதனிடையே இரவு சுமார் 2 மணியளவில் கார் தீப்பற்றி எரிந்து கொண்டிருப்பதை பார்த்த சதீஷ்குமார் காவல் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் கொடுத்தார். தகவலின் பேரில் குரோம்பேட்டை போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை மேற்கொண்டனர்.
எரிந்த காரை பொதுமக்கள் தண்ணீர் ஊற்றி அணைத்தனர். காரின் முன்பகுதி முழுவதும் எரிந்தது. கார் எப்படி தீப்பிடித்தது என்ற விவரம் தெரியவில்லை என தெரிவித்தனர். பார்க்கிங்கில் நிறுத்தியிருந்த கார் மர்மமான முறையில் திடீரென தீப்பற்றி எரிந்து சேதமானது குறித்துபோலீசார் விசாரிக்கின்றனர்.