பாறைக்குழி தண்ணீரில் மூழ்கி உயிரிழந்த அண்ணன் தங்கை.. திருப்பூரில் சோகம்
பயன்பாடில்லாத பாறைக்குழியில் தேங்கியுள்ள தண்ணீரில் மூழ்கி அண்ணன் தங்கைகளான சரவணகுமார் (10) மற்றும் ரோஷினி (8) இரு குழந்தைகள் பலி.
திருப்பூர் மாவட்டம் அம்மாபாளையம் ராமகிருஷ்ணா வீதியை சேர்ந்த கணேசன் என்பவரின் மனைவி ஈஸ்வரி. இவர் தனது கணவரை பிரிந்த நிலையில், சரவணகுமார் (10) மற்றும் ரோஷினி (8) ஆகிய இரு குழந்தைகளுடன் வசித்து வருகிறார். பூ வியாபாரம் செய்து குழந்தைகளை வளர்த்துவந்த இவர், நேற்று பிற்பகல் தனது தோழியின் வீட்டிற்கு சென்றுவிட்டு மாலை வீடு திரும்பியுள்ளார்.
அப்போது குழந்தைகள் வீட்டில் இல்லாததால் அக்கம்பக்கம் தேடிப்பார்த்துள்ளார். எங்கு தேடியும் குழந்தைகள் கிடைக்காததால் திருமுருகன் பூண்டி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இதையடுத்து போலீசார் மேற்கொண்ட விசாரணையில் இரு குழந்தைகளும் நேற்று பிற்பகல் முதல் மாலை வரை அருகில் உள்ள கானக்காடு பாறைக்குழியில் குளித்து விளையாடிக் கொண்டிந்தது தெரியவந்தது.
இதையடுத்து போலீசார் இன்று பாறைக்குழியில் தேடியபோது, குழந்தைகள் இருவரும் உயிரிழந்த நிலையில் தண்ணீரில் மிதந்துள்ளனர். குழந்தைகளின் உடலை கைப்பற்றிய போலீசார் பிரேத பரிசோதனைக்கு அனுப்பிவிட்டு விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.