தமிழகத்திற்கு எதிராக பாஜக அரசு செயல்படுகிறது: ஸ்டாலின்
காவிரி வழக்கு விசாரணையில் தமிழகத்தின் நலனுக்கு எதிராக மத்திய பாஜக அரசு செயல்படுவதாக திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் குற்றஞ்சாட்டியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், உச்சநீதிமன்றத்தில் நடைபெற்று வரும் காவிரி வழக்கு விசாரணையில் தமிழகத்தின் நலன்களுக்கு எதிராக மத்திய அரசின் வாதங்கள் அமைந்திருப்பதாக ஸ்டாலின் கூறியுள்ளார். நடுவர் மன்றத்தின் தீர்ப்புகள் மறு ஆய்வுக்கு உட்பட்டது என்ற கர்நாடகாவின் வாதத்தை விசாரணையின்போது மத்திய அரசும் திரும்பக் கூறியுள்ளதை அவர் சுட்டிக்காட்டியுள்ளார். கர்நாடகாவில் நடைபெற உள்ள பேரவைத் தேர்தலை மனதில் கொண்டு தமிழக விவசாயிகளின் நலனை காவு கொடுக்க மத்திய அரசு துணிந்துள்ளதாகவும் ஸ்டாலின் சாடியுள்ளார்.
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க மத்திய அரசு மனசாட்சியுடன் முன்வர வேண்டும் என்றும் கர்நாடகாவின் முயற்சிகளுக்கு துணை போகக்கூடாது என்றும் ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார். நடுவர் மன்ற இறுதித் தீர்ப்பை மாற்ற மத்திய அரசு முயற்சி செய்தால் அதை தமிழக மக்கள் மன்னிக்க மாட்டார்கள் என்றும் ஸ்டாலின் எச்சரிக்கை விடுத்துள்ளார்.