மழையால் மாற்றுத் தொழிலும் மண்ணாய் போனது... புலம்பும் சீர்காழி பட்டதாரி இளைஞர்

மழையால் மாற்றுத் தொழிலும் மண்ணாய் போனது... புலம்பும் சீர்காழி பட்டதாரி இளைஞர்

மழையால் மாற்றுத் தொழிலும் மண்ணாய் போனது... புலம்பும் சீர்காழி பட்டதாரி இளைஞர்
Published on

கொரோனா பாதிப்பால் புதிதாக செய்து வந்த மாற்று தொழிலும் முடங்கியதால் இளைஞர் ஒருவர் வேதனையின் உச்சத்திற்கே சென்றுள்ளார்.


மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியை அடுத்த மங்கைமடம் கிராமத்தை சேர்ந்தவர் மணிகண்டன். பட்டதாரி இளைஞரான இவர், சென்னையில் ஜ.டி உள்ளிட்ட நிறுவனங்களுக்கு வாடகை கார் இயக்கும் தொழில் செய்து வந்தார். இந்நிலையில் கொரோனா பொது முடக்கம் காரணமாக ஐ.டி நிறுவனங்கள் உட்பட அனைத்து நிறுவனங்களும் மூடப்பட்டதால் மணிகண்டனின் டிராவல்ஸ் நிறுவனமும் முடங்கியது. கார் ஓட்டுநர்களுக்கு சம்பளம் தர முடியாமலும், கார்களுக்கான மாத தவணைகளை செலுத்த முடியாமலும் தவித்து வந்தார்.

மேலும் பொது முடக்கம் நீட்டிக்கப்பட்டுக் கொண்டே சென்றதால் கார்களுக்கான தவணை தொகையும் அதிகரித்துக் கொண்டே சென்றது. சரி இனிமேல் டிராவல்ஸ் நிறுவனத்தை தொடர்ந்து நடத்த முடியாது என கவலையில் இருந்தார் மணிகண்டன்.


எனவே தன்னுடைய கார்களை விற்றுவிட்டு சொந்த ஊரிலேயே கட்டுமான பணிகளுக்கான செங்கல் தயாரிப்பு சுய தொழிலை தொடங்கினார். தொடக்கத்தில் பணியாளர்கள் இல்லாமல் தவித்த நிலையில் கடந்த இரண்டு மாதமாக கிடைத்த பணியாளர்களை கொண்டு செங்கல் தயாரிப்பு பணியை மும்முரமாக செய்து வந்தார்.

தயாரான செங்கற்களை வெயிலில் உலர்த்தும் பணி நடந்து வந்த நிலையில் கடந்த சில நாட்களாக பெய்த தொடர் மழையால் ஆயிரக்கணக்கான செங்கற்கல் கரைந்து மண்மேடுகளாக காட்சியளிக்கிறது. மேலும் தண்ணீர் தேங்கி நின்றதால் அடுக்கி வைக்கபட்ட கற்களும் அடுத்தடுத்து பாதிக்கப்பட்டதால் மணிகண்டன் வேதனையடைந்தார். கொரோனாவால் புதிதாக செய்துவந்த மாற்று தொழிலும் முடங்கியதால் எஞ்சிய செங்கற்களை காப்பாற்றும் முயற்சியில் இறங்கியுள்ளார்.


கொரோனா பொது முடக்கத்தால் பாதிக்கபட்ட இளைஞர்களுக்கு சுயதொழில் தொடங்க அரசு உதவ வேண்டும் என்றும், காலியாக உள்ள அரசு பணிகளில் குறைந்த ஊதியத்திலாவது பட்டதாரி இளைஞர்களை பணியமர்த்த அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மணிகண்டன் கோரிக்கை விடுத்துள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com