“கொரோனாவால் 4 மணி நேரம் உயிரற்ற நிலையில் இருந்தேன்” - கண்ணீர் மல்க அமைச்சர் காமராஜ் பேச்சு

“கொரோனாவால் 4 மணி நேரம் உயிரற்ற நிலையில் இருந்தேன்” - கண்ணீர் மல்க அமைச்சர் காமராஜ் பேச்சு

“கொரோனாவால் 4 மணி நேரம் உயிரற்ற நிலையில் இருந்தேன்” - கண்ணீர் மல்க அமைச்சர் காமராஜ் பேச்சு

’கொரோனா பாதிக்கப்பட்ட நேரத்தில் நான்கு மணி நேரம் உயிரற்ற நிலையில் இருந்தேன். உயிர் பெற்று வந்ததே அதிசயம் என சொல்கிறார்கள்’ என உணவுத்துறை அமைச்சர் காமராஜ் கண்ணீர் மல்க பேசினார்.

திருவாரூர் மாவட்டம் நன்னிலம் சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட அதிமுக கூட்டணிக் கட்சிகளின் செயல்வீரர்கள் கூட்டம் தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. இதில் பாஜக, பாமக, தமிழ் மாநில காங்கிரஸ் உள்ளிட்ட அதிமுகவின் கூட்டணி கட்சி நிர்வாகிகள் பங்கேற்றனர். இரண்டு மாத காலமாக கொரோனா வைரஸ் தொற்று பாதிப்பு ஏற்பட்டு பொது நிகழ்ச்சிகளில் பங்கேற்காமல் இருந்த உணவுத்துறை அமைச்சர் காமராஜ் முதல் முறையாக இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றுப் பேசினார்.

அப்போது அவர் பேசும் போது, “நன்னிலம் மக்களுக்கு எனது நன்றியை சமர்ப்பிக்கிறேன். உங்களுக்காக பணியாற்றி அதன்மூலம் சாவு வந்தாலும் அதனை வரவேற்பேன். 65 நாட்களுக்கு மேலாக மருத்துவ சிகிச்சை பெற்றுவந்த நான் ஏழு நாட்கள் நினைவின்றி இருந்தேன். நான்கு மணி நேரம் உயிரற்ற நிலையில் இருந்தேன். இறுதியாக தமிழக முதல்வர் துணை முதல்வர் மூலமாக சுகாதாரத்துறை அமைச்சர் மேற்கொண்ட முயற்சிகள் மற்றும் நன்னிலம் தொகுதி மக்களின் பிரார்த்தனையின் மூலமாக உயிர் பெற்று மீண்டு வந்துள்ளேன் ”என கண்ணீர் மல்க பேசினார்.

மேலும், “95 சதவீத நுரையீரல் செயல்படவில்லை. உயிர் பெற்று வந்ததே அதிசயம் என சொல்கிறார்கள். இது அத்தனைக்கும் காரணம் நன்னிலம் சட்டமன்ற தொகுதி மக்களின் பிரார்த்தனைதான். மேலும் இந்த நேரத்தில் நான் மீண்டுவர வேண்டும் என்று வாழ்த்திய எதிர்க்கட்சித் தலைவர் முக.ஸ்டாலின், திராவிட கழகத் தலைவர் வீரமணி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தலைவர் முத்தரசன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர் பாலகிருஷ்ணன், உள்ளிட்ட அனைவருக்கும் எனது நன்றியை சமர்ப்பிக்கிறேன்” என்றார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com