“அண்ணா பாணியில் சென்றால் மக்கள் மறந்துவிடுவார்கள்” - தங்க தமிழ்செல்வன்

“அண்ணா பாணியில் சென்றால் மக்கள் மறந்துவிடுவார்கள்” - தங்க தமிழ்செல்வன்
“அண்ணா பாணியில் சென்றால் மக்கள் மறந்துவிடுவார்கள்” - தங்க தமிழ்செல்வன்

மறப்போம், மன்னிப்போம் என்று அண்ணா பாணியில் சென்றால் மக்கள் எங்களை மறந்துவிடுவார்கள் என அமமுகவின் தங்க தமிழ்செல்வன் தெரிவித்துள்ளார்.

தேனியில் அமமுக வேட்பாளர் தங்க தமிழ்செல்வன் நேற்று செய்தியாளர்களை சந்தித்த போது “திமுகவுடன் சேர்ந்து அதிமுக ஆட்சியை கலைப்போம். நம்பிக்கை வாக்கெடுப்பின்போது ஆட்சியை கலைக்க திமுக எங்களுக்கு உதவ வேண்டும். ஆனால் திமுக ஆட்சி அமைக்க நாங்கள் ஆதரவு தர மாட்டோம்” எனத் தெரிவித்திருந்தார்.

இதையடுத்து இன்று தூத்துக்குடி விமான நிலையத்தில் பேசிய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தங்க தமிழ்செல்வன் மூலம் திமுக - அமமுக கூட்டு வெட்ட வெளிச்சமாகியுள்ளது எனத் தெரிவித்தார். 

இந்நிலையில் இன்று தங்க தமிழ்செல்வன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர், “அன்று ஜானகி ஆட்சியைக் கலைத்தற்கு காரணம் துரோக ஆட்சியை நீக்கிவிட்டு அம்மா தலைமையிலான ஆட்சியை கொண்டு வர வேண்டும் என்பதுதான். அதே பாணியில்தான் தற்போது எடப்பாடி ஆட்சியை கலைத்து விட்டு டிடிவி தினகரன் தலைமையிலான ஆட்சி அமைய வேண்டும். 

22 தொகுதிகளில் அமமுக வெற்றி பெற்றால் நம்பிக்கை வாக்கெடுப்பில் எடப்பாடி ஆட்சிக்கு எதிராகதான் நாங்கள் வாக்களிப்போம். அதேபோல், திமுகவும் அதிமுக ஆட்சி கலைய வேண்டும் என்றுதான் நினைக்கும். முஸ்லீம் லீக் கட்சியும், தமீமுன் அன்சாரியும் அதிமுக ஆட்சியைக் கலைக்கத்தான் வாக்களிப்பார்கள். அதன் அடிப்படையில்தான் நேற்று நான் திமுகவுடன் சேர்ந்து அதிமுக ஆட்சியை கலைப்போம் எனத் தெரிவித்தேன். அதற்கு நான் திமுகவுடன் கூட்டணி வைப்பதாக சொன்னது போன்று வாதம் செய்கின்றனர். 

ஏதாவது ஒரு பாதையில் ஒன்று சேர்ந்து போனால்தான் இந்த ஆட்சியை கலைக்க முடியும். மற்றபடி திமுக எங்களுக்கு எதிரிதான். மறப்போம், மன்னிப்போம் என்று அண்ணா பாணியில் சென்றால் மக்கள் எங்களை மறந்துவிடுவார்கள். ஒரே குட்டையில் ஊறுகின்ற மட்டைதான் என்று எங்களை நினைத்து விடுவார்கள். நாடாளுமன்றத் தேர்தலிலும் சட்டப்பேரவை   தேர்தலிலும் அதிமுக மிக மோசமான தோல்வியை சந்திக்கும். ஏனெனில் மக்கள் வெறுத்து போய் உள்ளனர்” எனத் தெரிவித்தார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com