"ஓபிஎஸ் பாஜக -வில் இணைவார் என்பது 100 சதவித உண்மை" : தங்க தமிழ்ச்செல்வன்

"ஓபிஎஸ் பாஜக -வில் இணைவார் என்பது 100 சதவித உண்மை" : தங்க தமிழ்ச்செல்வன்

"ஓபிஎஸ் பாஜக -வில் இணைவார் என்பது 100 சதவித உண்மை" : தங்க தமிழ்ச்செல்வன்
Published on

ஒ.பன்னீர்செல்வத்தின் துணை முதல்வர் பதவி வாங்கியது சந்தர்ப்பவாத அரசியல் என்றும் பாரதிய ஜனதா கட்சியில் அவர் இணைவார் என்பது 100% உண்மை என்றும் அமமுக கொள்கை பரப்புச் செயலாளர் தங்க தமிழ்ச்செல்வன் தெரிவித்துள்ளார்.

தமிழக துணை முதல்வரும் அதிமுகவின் துணை ஒருங்கிணைப்பாளருமான ஓ.பன்னீர்செல்வம் வாரணாசியில் பிரதமர் மோடி வேட்பு மனுத்தாக்கல் உள்ளிட்ட நிகழ்வுகளில் தனது குடும்பத்துடன் கலந்து கொண்ட விவகாரம் சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்த நிலையில் நேற்று அது குறித்து ஒரு விளக்க அறிக்கை ஒன்றை ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டார். அந்த விளக்கம் குறித்து அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் கொள்கைப் பரப்புச் செயலாளர் தங்க தமிழ்ச்செல்வன் புதிய தலைமுறைக்கு அளித்த பிரத்யேக பேட்டியில் துணை முதல்வர் ஒ.பன்னீர்செல்வத்தின் விளக்கம் போலித்தனமானது என்று சாடியுள்ளார்.

இது தொடர்பாக அவர் பேசுகையில், “ஓபிஎஸ் வெளியிட்டுள்ள விளக்க அறிக்கையில் உள்ள வாசகங்கள் அனைத்தும் பொய்யானது. ஓபிஎஸ் நிலைப்பாட்டில் உறுதித்தன்மை இல்லை, பதவிக்காக எந்த நிலைக்கும் செல்ல தயாராக உள்ளவர் ஓபிஎஸ் என்பதைத்தான் இந்த அறிக்கை காட்டுகிறது. தனது கருத்தை முட்டாள்தனமான கருத்து என கூறி விட்டு. தற்பொழுது 4 பக்கத்திற்கு அறிக்கை வெளியிட வேண்டிய அவசியம் என்ன? தான் இறந்த பிறகு கூட தனது உடலில் அதிமுக கொடி போர்த்தப்பட வேண்டும் என கூறும் ஒ.பி.எஸ், ஜெயலலிதா மறைவிற்கு பின்னர் எடப்பாடி பழனிச்சாமி முதல்வராக கூடாது என்பதற்காக அதிமுகவிற்கு எதிராக வாக்களித்தவர்.

கடந்த 2014 நாடாளுமன்றத் தேர்தலில் மோடியா, லேடியா என சவால் விட்டு 37 தொகுதிகளில் அதிமுக வெற்றி பெற்றதால், மோடிக்கு ஏற்பட்ட கோபத்தினால் அதிமுகவை அழிக்க வேண்டும் என நினைத்து ஓபிஎஸ் மூலமாக அதிமுகவை மோடி அழித்து வருகிறார். ஜெயலலிதா உடல்நலக்குறைவினால் சிகிச்சை பெற்றபோது அனைத்து தலைவர்களும் வந்த நிலையில் குற்ற உணர்சியின் காரணமாக மோடி வரவில்லை. அதிமுகவை ஊழல் ஆட்சி என விமர்சனம் செய்த ஓபிஎஸ், அதே ஊழல் ஆட்சியில் துணை முதல்வர் பதவி வாங்கியது சந்தர்ப்பவாத அரசியல்.

பாஜக ஓபிஎஸ்யை வைத்து அதிமுகவை செயல்படுத்தி வருகிறது. ஓ.பன்னீர்செல்வம் பாரதிய ஜனதா கட்சியில் இணைவார் என்பது 100% உண்மை. ஆடிட்டர் குருமூர்த்தி சொல்லி தர்மயுத்தம் துவங்கியது உண்மை. மோடி சொல்லி மீண்டும் அதிமுகவில் இணைந்து துணை முதல்வர் பதவி வாங்கியது உண்மை. தேர்தல் தோல்வி பயத்தால் பாரதிய ஜனதா கட்சியில் இணைந்து தனது சொத்தை பாதுகாக்கவே ஓபிஎஸ் பாரதிய ஜனதாவில் இணைய உள்ளார். அதிமுகவிற்கே சம்பந்தமில்லாத மோடி, அமித்ஷா, குரு மூர்த்தி ஆகியோர் கூறுவதை கேட்டு அதிமுக பாஜகவின் ஒரு அங்கமாக செயல்பட்டு வருகிறது.

சாதாரண தொண்டனாக இருந்த என்னை பதவிகள் கொடுத்து உயர்த்திய ஜெயலலிதாவிற்கு நன்றி சொல்லும் ஒபிஎஸ், முதலில் டிடிவி தினகரனுக்குதான்   நன்றி சொல்ல வேண்டும்.டிடிவி-யால் உருவாக்கப்பட்டவர் தான் என்ற நன்றியை மறந்து விட்டார் ஓ.பன்னீர்செல்வம்” எனவும் தெரிவித்துள்ளார்.
 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com